தேவதானப்பட்டி பகுதியில், அறுவடைக்கு தயார் நிலையில் செங்கரும்பு - விலை குறைவால் விவசாயிகள் கவலை


தேவதானப்பட்டி பகுதியில், அறுவடைக்கு தயார் நிலையில் செங்கரும்பு - விலை குறைவால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 11 Jan 2020 3:30 AM IST (Updated: 11 Jan 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் செங்கரும்பு உள்ளது. விலை குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேவதானப்பட்டி,

தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, சின்னமனூர், கூழையனூர் பகுதிகளில் செங்கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தேவதானப்பட்டி பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் தான் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. அவை தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

பொங்கல் பண்டிகை என்றாலே செங்கரும்பு தவிர்க்க முடியாதது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், செங்கரும்பு அறுவடை பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளது. இதற்காக விவசாயிகளை வியாபாரிகள் நேரில் சந்தித்து கரும்புகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனையாகிறது. சாகுபடி செலவுடன் ஒப்பிடுகையில் இந்த விலை விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் நிலையில் இல்லை. சாகுபடி பரப்பளவு அதிகரித்து உள்ளதோடு, குறைவான விலைக்கே வியாபாரிகள் கேட்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்த கரும்பு சாகுபடி விவசாயிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

ஒரு ஏக்கர் செங்கரும்பு சாகுபடிக்கு உழவு, நடவு, தொழுஉரம், களையெடுப்பு, ரசாயன உரம், தோகை உரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரை செலவு செய்துள்ளோம்.

தமிழகத்தில் மற்ற இடங்களில் சாகுபடி செய்யப்படும் செங்கரும்பை காட்டிலும் தேவதானப்பட்டி செங்கரும்புக்கு தனி மவுசு உண்டு. இங்கு, மஞ்சளாறு அணை பாசன பரப்பு நிலங்களில் செங்கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வரட்டாறு, இருட்டாறு, மூலையாறு, தலையாறு, மஞ்சளாறு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் அங்குள்ள மூலிகைகள் மேல்பட்டு மஞ்சளாறு அணைக்கு வருகிறது. இதனால் மூலிகை தண்ணீர் பாய்ந்து வளரும் செங்கரும்புகள் தனி சுவையுடன் இருக்கும்.

தற்போது கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் இருந்தும் கரும்பு வாங்குவதற்கு வியாபாரிகள் வருகின்றனர். அவர்கள் கேட்கும் விலை கட்டுப்படியாகும் வகையில் இல்லை. ஒரு கட்டு ரூ.300 வீதம் விற்பனை செய்யப்பட்டால் தான் விலை கட்டுப்படியாகும். விவசாயிகளுக்கு ந‌‌ஷ்டம் ஏற்படாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
1 More update

Next Story