கடலூரில், மீனவர் வாழ்வுரிமை இயக்கத்தினர் படகுடன் ஆர்ப்பாட்டம்


கடலூரில், மீனவர் வாழ்வுரிமை இயக்கத்தினர் படகுடன் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jan 2020 10:15 PM GMT (Updated: 11 Jan 2020 12:21 AM GMT)

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கடலூரில், மீனவர் வாழ்வுரிமை இயக்கத்தினர் படகுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர், 

மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மீன்பிடிக்க கடலுக்கு சென்று உயிரிழக்கும் மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும். மண்டல கமி‌‌ஷன் பரிந்துரைப்படி மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைத்திட வேண்டும். மீன்பிடிப்பு ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று காலை மீனவர் வாழ்வுரிமை இயக்கத்தினர் படகு மற்றும் வலையுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர் வாழ்வுரிமை இயக்க நிறுவன தலைவர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் தங்கேஸ்வரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக வக்கீல் சிவராஜ், மீனவர் வாழ்வுரிமை இயக்க தலைமை நிலைய பொறுப்பாளர் கன்னியப்பன், பருவதராஜகுல சங்க மாநில தலைவர் கனகசபை ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் அனைத்து மீனவ கிராம தலைவர்கள், அமைப்பு நிர்வாகிகள், விசைப்படகு உரிமையாளர்கள், மீன் வியாபாரிகள் மற்றும் மீனவர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

Next Story