கொரடாச்சேரி ஒன்றியக்குழு தலைவர்- துணைத்தலைவர் பதவியை பிடித்த தம்பதி மறைமுக தேர்தலில் நடந்த சுவாரஸ்யம்


கொரடாச்சேரி ஒன்றியக்குழு தலைவர்- துணைத்தலைவர் பதவியை பிடித்த தம்பதி மறைமுக தேர்தலில் நடந்த சுவாரஸ்யம்
x
தினத்தந்தி 11 Jan 2020 11:15 PM GMT (Updated: 11 Jan 2020 3:48 PM GMT)

திருவாரூர் அருகே உள்ள கொரடாச்சேரி ஒன்றியக்குழு தலைவராக மனைவியும், துணை தலைவராக அவருடைய கணவரும் தேர்வு செய்யப்பட்டனர். மறைமுக தேர்தலில் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.

கொரடாச்சேரி,

திருவாரூர் அருகே உள்ள கொரடாச்சேரி ஒன்றியக்குழு 18 உறுப்பினர்களை கொண்டது. இந்த ஒன்றியக்குழுவுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக நடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட 13 பேர் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க.வுக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

இங்கு ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. தேர்தல் ஆணையர்கள் வாசுதேவன், மகாதேவன் ஆகியோர் தேர்தலை நடத்தினர்.

தம்பதியினர் தேர்வு

இதில் தி.மு.க.வை சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர் உமாபிரியா (வயது 40) போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவர், கொரடாச்சேரி ஒன்றியம் 13-வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.

இதனை தொடர்ந்து துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் 3-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வை சேர்ந்த பாலச்சந்திரன் (52) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர், தலைவராக தேர்வு செய்யப்பட்ட உமாபிரியாவின் கணவர் ஆவார்.

சுவாரஸ்யம்

தலைவர் மற்றும் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்ட உமாபிரியா, அவருடைய கணவர் பாலச்சந்திரன் தம்பதியினிரை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் வாழ்த்தினர். இந்த தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த 5 உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை.

ஒன்றியக்குழு தலைவர் உமாபிரியா எம்.எஸ்சி., பி.எட். படித்துள்ளார். இவருடைய கணவர் பாலச்சந்திரன், தி.மு.க.வின் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். இவர்களுக்கு உதயச்சந்திரன், இன்பசந்திரன் என 2 மகன்கள் உள்ளனர். மறைமுக தேர்தலில் மனைவி தலைவராகவும், கணவர் துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்ட நிகழ்வு அங்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

நிறுத்தம்

கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட 41 ஊராட்சி மன்ற துணை தலைவர் பொறுப்புக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. இந்த ஒன்றியத்தில் அம்மையப்பன், காவனூர், கமலாபுரம் ஆகிய 3 ஊராட்சி மன்றங்களுக்கான துணை தலைவர் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story