அம்மாபேட்டையில் அதிக பணம் தருவதாக கூறி பெண்ணிடம் 40 பவுன் நகை-ரூ.4 லட்சம் மோசடி - தந்தை-மகனுக்கு வலைவீச்சு
அம்மாபேட்டையில் அதிகம் பணம் தருவதாக கூறி பெண்ணிடம் 40 பவுன் நகை, ரூ.4 லட்சம் மோசடி செய்த தந்தை-மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.
அம்மா பேட்டை,
அம்மாபேட்டையை சேர்ந்த 32 வயது பெண் ஒருவருக்கும் ஊமாரெட்டியூரை சேர்ந்த கோபிநாத் (வயது 32) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோபிநாத் அந்த பெண்ணிடம், ‘நான் பல்வேறு தொழிலில் பணத்தை முதலீடு செய்து அதிக பணம் சம்பாதித்து வருகிறேன். நீயும் பணம் இருந்தால் கொடு. அதை இரட்டிப்பாக்கி தருகிறேன்’ என்று நைசாக பேசி ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
இதனை நம்பி அந்த பெண் தன்னிடம் இருந்த ரூ.4 லட்சத்தை தனது தோழி ஒருவர் முன்னிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜுன் மாதம் 19-ந் தேதி அன்று கோபிநாத்திடம் வழங்கியுள்ளார். ஆனால் அந்த பணத்திற்கான லாபத் தொகையை வழங்காமல் கோபிநாத் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதுகுறித்து கோபிநாத்திடம் அந்த பெண் கேட்டுள்ளார். அப்போது கோபிநாத், ‘இப்பொழுதுதான் தொழில் சூடு பிடிக்கிறது. இன்னும் உன்னிடம் பணம் இருந்தால் கொடு. பணத்தை உடனடியாக எடுத்துவிடலாம்’ என்று கூறியுள்ளார்.
அதற்கு அந்த பெண், ‘என்னிடம் பணம் எதுவும் இல்லை. எனது கணவர் போட்ட நகை மட்டுமே உள்ளது’ என்று கூறியுள்ளார். உடனே அந்த நபர், ‘சரி நகையை கொடு அதனை வங்கியில் அடமானம் வைத்து பின்னர் திருப்பி கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த பெண் மறுத்துள்ளார். நகையை கொடுப்பது எனது கணவருக்கு தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்று கூறியுள்ளார். அதற்கு கோபிநாத் ஒன்றும் கவலைப்படாதே. உன்னுடைய நகைக்கு உண்டான கவரிங் நகை என்னிடம் உள்ளது. அதை வைத்து கணவரிடம் சமாளித்து கொள். பிறகு நகையை சீக்கிரம் மீட்டு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
அதையும் நம்பி மீண்டும் தன்னிடம் இருந்த 40 பவுன் நகையை அந்த பெண் கோபிநாத்திடம் வழங்கியுள்ளார். ஆனால் அதன் பின்னர் கோபிநாத் அந்த பெண்னிடம் சரியான பதில் கூறாமல் பணத்தையும் நகையையும் திருப்பி தராமல் இழுத்தடித்துள்ளார். இதனால் அந்த பெண் கோபிநாத்தின் வீட்டிற்கு நேரில் சென்று கேட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த கோபிநாத் மற்றும் அவரது தந்தை அப்புசாமி ஆகியோர், அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அந்த பெண் இதுபற்றி அம்மாபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கோபிநாத் மற்றும் அவரது தந்தை அப்புசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story