திருப்பூரில் தொழிலாளி அடித்துக்கொலை: 2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை


திருப்பூரில் தொழிலாளி அடித்துக்கொலை: 2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Jan 2020 4:13 AM IST (Updated: 12 Jan 2020 4:18 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

திருப்பூர்,

திருப்பூரில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கோல்டன் நகர் அருகே பவானி நகரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 37). பனியன் நிறுவன தொழிலாளி. இவருக்கும் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அப்துல்காதர்(41) என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது.

சம்பவத்தன்று அப்துல்காதர், அவருடைய நண்பர் நாகராஜ்(43) உள்ளிட்டவர்கள் சுரேசிடம் பணம் கேட்டு தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து வடக்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அப்துல்காதர், நாகராஜ், சாகுல் அமீது(43) ஆகியோரை தேடி வந்தனர். இதில் தொட்டிய மண்ணரையை சேர்ந்த சாகுல் அமீதுவை வடக்கு போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் அப்துல்காதர், நாகராஜ் இருவரும் ஆரணி கோர்ட்டில் கடந்த 4-ந் தேதி சரண் அடைந்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வடக்கு போலீசார் கோர்ட்டில் மனு செய்தனர். கோர்ட்டு அனுமதியுடன் நேற்று முன்தினம் மாலை 2 பேரையும் ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பணப்பிரச்சினை காரணமாக சுரேசை தாக்கியதில் அவர் இறந்தது தெரியவந்தது. மேலும் சம்பவம் நடந்த பகுதிக்கு போலீசார் அப்துல்காதர், நாகராஜ் ஆகிய 2 பேரையும் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் நேற்று மாலை 2 பேரையும் திருப்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.1-ல் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.


Next Story