மாவட்ட செய்திகள்

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் கோஷ்டி மோதலால் துணைத்தலைவர் பதவியை பறி கொடுத்த காங்கிரஸ் + "||" + Congress sworn in as Palladam panchayat union vice president

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் கோஷ்டி மோதலால் துணைத்தலைவர் பதவியை பறி கொடுத்த காங்கிரஸ்

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் கோஷ்டி மோதலால் துணைத்தலைவர் பதவியை பறி கொடுத்த காங்கிரஸ்
பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் கோஷ்டி மோதலால் துணைத்தலைவர் பதவியை காங்கிரஸ் பறி கொடுத்தது.
பல்லடம்,

திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் 13 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. 5 இடங்களிலும், தி.மு.க. 5 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் தலைவர் பதவியை கைப்பற்ற வியூகம் வகுக்கப்பட்டது. அதன்படி தி.மு.க. நிர்வாகிகளும், காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து ஆலோசித்தனர். தலைவர் பதவிக்கு தி.மு.க. போட்டியிடுவது எனவும், துணைத்தலைவர் பதவிக்கு காங்கிரசுக்கு வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.


இந்த நிலையில் நேற்று ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் பல்லடத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் தேன்மொழி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் நந்தினி போட்டியிட்டார்.

தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், சுயேச்சை ஆதரவுடன் தேன்மொழி 8 ஓட்டுகள் பெற்று தலைவர் பதவியில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நந்தினி 5 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.

இதையடுத்து நேற்று மாலை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கவுன்சிலர்கள் மகாலிங்கம்(1-வது வார்டு), ஈஸ்வரி பாலசுப்பிரமணியம்(2-வது வார்டு) இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. காங்கிரஸ் கவுன்சிலர்கள் இருவரும் தங்களுக்கு தான் துணைத்தலைவர் பதவி ஒதுக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி, பல்லடம் வட்டார காங்கிரஸ் தலைவர் சூரியமூர்த்தி ஆகியோர் மகாலிங்கத்தை துணைத்தலைவராக தேர்ந்தெடுக்க ஆதரவு தெரிவித்தனர். காங்கிரஸ் கவுன்சிலர் ஈஸ்வரி பாலசுப்பிரமணியத்துக்கு அவரது கணவரும், திருப்பூர் வடக்கு மாவட்ட பொருளாளருமான பாலசுப்பிரமணியம் ஆதரவு தெரிவித்தார்.

இதற்கிடையே பல்லடம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் காங்கிரஸ் நிர்வாகிகளிடம், 2 கவுன்சிலர்களில் யாராவது ஒருவரை துணைத்தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்து விரைந்து அனுப்பும்படி கேட்டு கொண்டார். இந்த நிலையில் துணைத்தலைவர் பதவி தனக்கு தான் வழங்க வேண்டும் என்று இரு கவுன்சிலர்களும் தங்கள் ஆதரவாளர்களுடன் காரசாரமாக கட்சி நிர்வாகிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் துணைத்தலைவர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்றதை அறிந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஒன்று கூடி ஆலோசனை செய்தனர். இது பற்றி அறிந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் கோஷ்டி மோதலால் துணைத்தலைவர் பதவியை இழந்து விட கூடாது என்பதற்காக கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் மதியம் 2.45 மணி அளவில் தி.மு.க. சார்பில் 7-வது வார்டு கவுன்சிலர் பாலசுப்பிரமணியத்தை துணைத்தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தனர். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் பாலசுப்பிரமணியம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது பற்றி அறிந்த காங்கிரஸ் நிர்வாகிகள், தி.மு.க.வினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், எங்களுக்கு ஒதுக்கிய துணைத்தலைவர் பதவியை எப்படி நீங்களே எடுத்து கொள்ளலாம் என்றனர். அப்போது தி.மு.க.வினர் நீங்கள் துணைத்தலைவராக தேர்ந்தெடுப்பவரின் பெயரை அறிவிக்க காலதாமதம் செய்து விட்டீர்கள். அதனால் தான் துணைத்தலைவர் பதவியை இழந்து விடக்கூடாது என்பதற்காக தான் நாங்கள் போட்டியிட்டோம் என்றனர். இதனால் தி.மு.க. வினருக்கும். காங்கிரசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு நின்றிருந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பல்லடம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறும் போது, “பல்லடம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவி காங்கிரசுக்கு தான் ஒதுக்கி இருந்தோம். 2 கவுன்சிலர்களில் யாராவது ஒருவர் துணைத்தலைவராக வந்தாலும் அதை ஏற்க தயாராக இருந்தோம். இருவரும் தங்களுக்கு தான் துணைத்தலைவர் பதவி வழங்க வேண்டும் கோஷ்டி பூசலில் ஈடுபட்டதால் அந்த பதவி அ.தி.மு.க.விடம் சென்று விடக்கூடாது என்பதற்காக தான் தி.மு.க. சார்பில் துணைத்தலைவர் பதவிக்கு கவுன்சிலர் நிறுத்தப்பட்டு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்” என்றார்.

பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி பூசலால் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பதவியை அது இழந்து இருக்கிறது. 2 கவுன்சிலர்களில் யாராவது ஒருவருக்கு துணைத்தலைவர் கிடைத்தால் போதும் என்று நினைத்து இருந்தால் அவர்களில் ஒருவர் பல்லடம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பார் என்று அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்தனர்.


ஆசிரியரின் தேர்வுகள்...