மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் 2,298 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது


மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் 2,298 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது
x
தினத்தந்தி 13 Jan 2020 4:30 AM IST (Updated: 13 Jan 2020 3:57 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான 2-வது கட்ட சிறப்பு முகாம் கடலூர் மாவட்டத்தில் 2,298 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் அன்புசெல்வன் கடந்த மாதம் 23-ந் தேதி வெளியிட்டார். இதன் தொடர் நிகழ்ச்சியாக வருகிற 23-ந் தேதி வரை வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய அனைத்து உதவி வாக்குப்பதிவு அலுவலர் அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்களில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.

இது தவிர வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 4 கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்ட சிறப்பு முகாம் மாவட்டத்தில் உள்ள கடந்த 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

சிறப்பு முகாம்

இதைத் தொடர்ந்து 2-வது கட்ட சிறப்பு முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 2,298 வாக்குச்சாவடி களில் நடந்த இந்த முகாமில் ஏராளமான வாக்காளர்கள் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் தொடர்பாக விண்ணப்பம் கொடுத்தனர். கடலூர் புதுப்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை கடலூர் தாசில்தார் செல்வக்குமார் நேரில் ஆய்வு செய்தார். அப்போது வருவாய் ஆய்வாளர் ரவி உடன் இருந்தார்.

அதேபோல் கடலூர் நகராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட நேத்தாஜி சாலையில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விண்ணப்பம் கொடுத்தனர்.

அரசியல் கட்சியினர் ஆர்வம்

மேலும் சில அரசியல் கட்சியினரும் தங்கள் பகுதியில் பெயர் பதிவு செய்யாத புதிய வாக்காளர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என தேடிப்பிடித்து முகாமுக்கு அழைத்து வந்து வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்காக விண்ணப்பிக்க வைத்தனர்.

ஏற்கனவே நடைபெற்ற சிறப்பு முகாம்களில் வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருந்ததால் நேற்று சில வாக்குச்சாவடி மையங்கள் வெறிச்சோடி கிடந்ததை பார்க்க முடிந்தது. திருத்தம், முகவரி மாற்றம், பெயர் நீக்கம் தொடர்பான விண்ணப்பங்கள் குறைந்த அளவிலேயே பெறப்பட்டுள்ளதாக வாக்குச்சாவடி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story