ரூ.300 கோடி வெளிநாட்டு பணம் தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.1¼ கோடி மோசடி; 4 பேர் கைது - 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு


ரூ.300 கோடி வெளிநாட்டு பணம் தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.1¼ கோடி மோசடி; 4 பேர் கைது - 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Jan 2020 10:45 PM GMT (Updated: 13 Jan 2020 8:11 PM GMT)

ரூ.300 கோடி வெளிநாட்டு பணம் தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம், 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள குள்ளாங்கவுண்டனூர் குமரன் காடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 49). விவசாயி. இவரது உறவினரின் நண்பர்களான சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் மகன் சிவக்குமார் என்கிற அரவிந்த் (29), சங்ககிரி தொண்டிக்காடு பகுதியை சேர்ந்த காதர்பாட்ஷா மகன் நிஷாந்த் என்கிற ரபீக் (30), முரளி மகன் அஸ்லின் (30), எடப்பாடியை சேர்ந்த முத்துசாமி மகன் மாதேஸ் (22) உள்பட 7 பேர் சேர்ந்து வெளிநாட்டில் உள்ள ஒரு அமைப்பில் இருந்து தங்களுக்கு ரூ.300 கோடி பணம் வந்து உள்ளது. அந்த பணம் எங்கள் மூலமாகத்தான் வழங்க வேண்டும். மேலும் வெளிநாட்டு பணத்தை இந்திய ரூபாயாக மாற்ற வேண்டும் என்றால் செலவு ஆகும் என்று கூறி உள்ளனர். மேலும் நீங்கள் ரூ.1¼ கோடி தந்தால் ரூ.300 கோடியை தருவதாக தெரிவித்துள்ளனர். இதை நம்பிய அவர் தனது 4½ ஏக்கர் நிலத்தை ரூ.1¼ கோடிக்கு விற்று உள்ளார். பின்னர் 4 தவணைகளாக கடந்த 1½ ஆண்டில் அந்த பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் வெளிநாட்டு பணத்தை அவருக்கு கொடுக்க வில்லை.

இந்த நிலையில் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிவேலை மீண்டும் சந்தித்து வெளிநாட்டு பணம் சேலத்தில் உள்ள பொதுத்துறை வங்கிக்கு வந்து உள்ளது. ஒரு விழா வைத்து அந்த பணத்தை தங்களுக்கு வழங்க உள்ளோம். அதற்காக ரூ.10 லட்சம் கேட்டு உள்ளனர். அப்போது பழனிவேலுக்கு தன்னிடம் மோசடி செய்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளது. இதையொட்டி பழனிவேல் சேலம் அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மோசடி கும்பலிடம் பணம் தருவதாகவும், சேலம் 5 ரோடு பகுதியில் வந்து பணத்தை வாங்கிச்செல்லும்படி மோசடி கும்பலிடம் தெரிவிக்கும்படி பழனிவேலிடம் போலீசார் கூறினர். இதை அவர் மோசடி கும்பலிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சேலம் 5 ரோடு பகுதிக்கு நேற்று வந்தனர்.

இதையடுத்த சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் செந்தில் தலைமையில், துணை கமிஷனர் பூபதிராஜன், அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் மற்றும் போலீசார் நேற்று மாறுவேடத்தில் 5 ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது மோசடி கும்பலை சேர்ந்த அரவிந்த், ரபீக், அஸ்லின் ஆகியோர் பழனிவேலிடம் பணம் தரும்படி கேட்டனர். அங்கு மாறு வேடத்தில் நின்றிருந்த போலீசார் மோசடி கும்பலை சேர்ந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் வெளிநாட்டு பணம் வாங்கித்தருவதாக கூறி பழனிவேலிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையொட்டி அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த மோசடியில் ஈடுபட்ட எடப்பாடியை சேர்ந்த முத்துசாமி மகன் மாதேஸ் (22) என்பவரையும் கைது செய்தனர். பின்னர் இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கியநபர்களான லோகநாதன், சரவணன், கிஷோர்குமார் ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் செந்தில் கூறும்போது, வெளிநாட்டில் இருந்து பணம் வந்து உள்ளது. ஒரு அமைப்பில் இருந்து பணம் வந்து உள்ளது. லட்சக்கணக்கில் பணம் செலவு செய்தால், கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று கூறும் மோசடி கும்பலிடம் பொது மக்கள் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கூறினார்.

Next Story