விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க போக்குவரத்துத்துறை முனைப்போடு செயல்படுகிறது; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி


விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க போக்குவரத்துத்துறை முனைப்போடு செயல்படுகிறது; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 14 Jan 2020 11:00 PM GMT (Updated: 14 Jan 2020 1:31 PM GMT)

விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க போக்குவரத்துத்துறை முனைப்போடு செயல்படுகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர், 

கரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள், பொதுமக்களுக்கு வாகனம் ஓட்டும்போது சாலை விதிகளை கடைபிடிப்பது, மிதவேகத்துடன் பயணம் மேற்கொள்வது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதிருப்பது போன்றவற்றை விளக்கும் வகையிலான விழிப்புணர்வு பிரசார பஸ்சானது, போக்குவரத்து கழகம் சார்பில் தயாராகியுள்ளது. கரூர் பஸ் நிலையத்தில் இருந்து, விபத்து தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு பிரசார பஸ்சின் பயணத்தை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயாஸ்கர் தொடங்கி வைத்தார். மேலும் பஸ்சுக்குள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் குறித்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

பின்னர் அமைச்சர், நிருபர்களிடம் தெரிவித்ததாவது:–

சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. கரூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவ–மாணவிகளுக்கும் சாலை பாதுகாப்பு குறித்தும், சாலை விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான தகவல்கள் அடங்கிய பஸ் பயணம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் தமிழகம் சாலை விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைத்ததில் முதல் மாநிலமாக திகழ்கின்ற காரணத்தால், மத்திய அரசின் சார்பில் சாலை பாதுகாப்பிற்கான விருது வழங்கப்படவுள்ளது.

தமிழக அரசின் முயற்சியால் தற்போது சாலை விபத்துகள் குறைந்திருக்கின்றன. இன்னும் மாணவ–மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதில் போக்குவரத்துத்துறை முனைப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை மந்திரி நிதின்கட்காரி நாடாளுமன்றத்தில் பேசும்போது, சாலை விபத்துகளை குறைக்க மற்ற மாநிலங்களும் தமிழகத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறியது பெருமைக்குரிய ஒன்றாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கீதா எம்.எல்.ஏ., தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர்(கும்பகோணம்) பொன்முடி, கரூர் மண்டல போக்குவரத்துக்கழக பொது மேலாளர் குணசேகரன், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் தானேஷ் என்ற முத்துக்குமார், நகர அ.தி.மு.க. செயலாளர்கள் வி.சி.கே.ஜெயராஜ், வெங்கமேடு பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story