கல்வராயன்மலை வனப்பகுதியில் 7 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு வனத்துறையினர் நடவடிக்கை


கல்வராயன்மலை வனப்பகுதியில் 7 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு வனத்துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Jan 2020 4:30 AM IST (Updated: 15 Jan 2020 1:39 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலை வனப்பகுதியில் 7 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை வனத்துறையினர் கைப்பற்றி அழித்தனர்.

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலையில் அட ர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு ஏராளமான நீர்வீழ்ச்சிகளும், நீரோடைகளும் உள்ளன. இந்த நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி மர்மநபர்கள் சிலர் சாராயம் காய்ச்சி பல்வேறு மாவட்டங்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகிறார்கள். தற்போது பொங்கல் பண்டிகை என்பதாலும், நீரோடைகளில் அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் வனப்பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் மற்றும் போலீசார் நடத்திய சாராய வேட்டையில் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

மீண்டும் வேட்டை

இந்த நிலையில் மீண்டும் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட வனஅலுவலர் அபிஷேக் தோமத் உத்தரவின்பேரில் வெள்ளிமலை வனச்சரகர் ராஜா தலைமையிலான வனத்துறையினர், வெள்ளிமலை, இன்னாடு வனசரகத்துக்கு உட்பட்ட மணியார்பாளையம், ஈச்சங்காடு, அருவங்காடு, கொட்டப்புத்தூர் ஆகிய வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அருவங்காடு, ஈச்சங்காடு ஆகிய வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 7 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சாராய ஊறலை கைப்பற்றிய வனத்துறையினர் அவற்றை கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சிய நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கல்படை பெரிய ஆறு வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 1,200 லிட்டர், மல்லிகைப்பாடி வனப்பகுதியில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 400 லிட்டர் சாராய ஊறலையும் போலீசார் கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர்.


Next Story