திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி


திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி
x
தினத்தந்தி 16 Jan 2020 11:00 PM GMT (Updated: 16 Jan 2020 5:06 PM GMT)

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தியாகராஜர் 173-வது ஆண்டு ஆராதனை விழாவை கடந்த 11-ந் தேதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து தினமும் இசை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக காலை 8.30 மணிக்கு மங்கள இசை நடந்தது.

இசை அஞ்சலி

அதை தொடர்ந்து 9 மணிக்கு விழா பந்தலில் சுதா ரகுநாதன், மஹதி, மகாநதி ஷேபானா, கடலூர் ஜனனி, ஓ.எஸ்.அருண், சந்தீப் நாராயணன், பின்னி கிருஷ்ணமூர்த்தி, மாண்டலின் ராஜேஷ், அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், பிரபஞ்சம் பாலச்சந்தரன், திருப்பாப்புரம் மீனாட்சிசுந்தரம், லால்குடி விஜயலெட்சுமி, வடுவூர் கிருஷ்ணமூர்த்தி, சின்னமனூர் விஜய் கார்த்திகேயன் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொண்டு ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தி னர். முன்னதாக தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து தியாகராஜர் சிலை ஊர்வலமாக உஞ்சவிருத்தி பஜனை யுடன் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து விழா பந்தலை அடைந்தது. அப்போது தியாகராஜர் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஷேக் மகபூப் சுபானி, காலிஷா பீ மகபூப் ஆகியோரின் நாதஸ்வர நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் தியாகராஜர் வீதி உலாவும் நடந்தது. இரவு 8.20 மணிக்கு கர்நாடக சகோதரர்கள் சசிகிரண், கணேஷ் ஆகியோரின் பாட்டும், இரவு 10 மணிக்கு கல்யாணபுரம் கணேசன், கார்த்திகேயன் ஆகியோரின் நாதஸ்வர நிகழ்ச்சியும். இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைந்தது.

ஏற்பாடுகள்

விழா ஏற்பாடுகளை தியாக பிரம்ம மகோத்சவ சபை தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் அறங்காவலர்கள் சுரேஷ் மூப்பனார், சந்திரசேகர மூப்பனார், சுதாகர் மூப்பனார், செயலாளர்கள் ஏ.கே.பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், பொருளாளர் கணேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின்பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.


Next Story