சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான பயங்கரவாதிகள் 2 பேர் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்


சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான பயங்கரவாதிகள் 2 பேர் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 17 Jan 2020 5:00 AM IST (Updated: 17 Jan 2020 2:13 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை சோதனைச் சாவடியில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் 2 பேரை குழித்துறை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 20-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு ஜெயசங்கர் உத்தரவிட்டார்.

நாகர்கோவில்,

தமிழக- கேரள எல்லையில் குமரி மாவட்டம் களியக்காவிளையில் சோதனை சாவடி ஒன்று உள்ளது. இங்கு கடந்த 8-ந் தேதி இரவு பணியில் இருந்த களியக்காவிளை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த கொலையில் ஈடுபட்டது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீம் (32), நாகர்கோவில் இளங்கடையைச் சேர்ந்த தவுபிக் (28) என்பதும் தெரிய வந்தது.

கர்நாடகா வழியாக தப்ப முயற்சி

தமிழ்நாடு, கேரள போலீசார் பயங்கரவாதிகள் 2 பேரின் புகைப்படங்களையும் வெளியிட்டதோடு, அவர்களை பற்றி தகவல் கொடுப்போர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்தனர். இருமாநில போலீசாரும் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே பயங்கரவாதிகளுக்கு துப்பாக்கி வாங்கி கொடுத்ததாக மெகபூப் பாஷா என்ற இஜாஸ் பாஷாவை கர்நாடக மாநில போலீசார் குண்டலுபேட்டையில் கைது செய்தனர். கார் டிரைவரான இவர்தான் பயங்கரவாதிகள் 2 பேருக்கும் துப்பாக்கி வாங்கி கொடுத்தது தெரிய வந்தது.

மேலும் அப்துல் சமீம் தனது கூட்டாளிகளான காஜாமொய்தீன், செய்யது அலி நவாஸ் ஆகியோருடன் சேர்ந்து புதிதாக ஒரு இயக்கத்தை உருவாக்கி அதன்மூலம் தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரிய வந்தது. மேலும் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரும் கேரளாவில் இருந்து கர்நாடக மாநிலம் உடுப்பி வழியாக மராட்டிய மாநிலத்துக்கு ரெயிலில் தப்பிச்செல்ல முயன்றது தெரிய வந்தது.

துருவி, துருவி விசாரணை

இதையடுத்து கர்நாடக போலீசார் தமிழகம் மற்றும் கேரள மாநில போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் உடுப்பி போலீசாரும் உஷார் படுத்தப்பட்டனர். தகவல் கிடைத்ததும் தமிழகம் மற்றும் கேரள மாநில போலீசார் உடுப்பி இந்திராலி ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு அரண் அமைத்து எக்ஸ்பிரஸ் ரெயிலில் வடமாநிலத்துக்கு தப்ப முயன்ற அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரையும் நேற்று முன்தினம் இரவில் குமரி மாவட்டத்துக்கு அழைத்து வந்தனர். நேற்று காலை 5 மணிக்கு அவர்கள் களியக்காவிளை போலீஸ் நிலையம் வந்து சேர்ந்தனர். அங்கு சுமார் 1½ மணி நேரம் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 6.30 மணிக்கு அங்கிருந்து தக்கலைக்கு புறப்பட்டனர். 7 மணி அளவில் தக்கலை போலீஸ் நிலையத்துக்கு வந்து சேர்ந்த அவர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். 2 பேரிடமும் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், வில்சன் கொலை வழக்கை விசாரணை நடத்தும் துணை சூப்பிரண்டு கணேசன், தக்கலை துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், குளச்சல் மற்றும் சிவகங்கை, விருதுநகர் மாவட்ட உதவி சூப்பிரண்டுகள், கியூ பிராஞ்ச் அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோர் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

13 மணி நேரம்

பயங்கரவாதிகளிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து தக்கலை போலீஸ் நிலையத்துக்கு கமாண்டோ மற்றும் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். விசாரணை முடிந்து குழித்துறை கோர்ட்டுக்கு பயங்கரவாதிகளை அழைத்துச்சென்று ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்திருந்ததால் கோர்ட்டு வளாகம் மற்றும் கோர்ட்டுக்கு வெளியே அதிரடிப்படை போலீசாரின் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு இருந்தது. விசாரணை இரவு 8 மணி வரையில் 13 மணி நேரம் நடந்தது.

இதற்கிடையே பாதுகாப்பு காரணங்களுக்காக பயங்கரவாதிகள் 2 பேருக்கும் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்கு பதிலாக, அரசு டாக்டர்கள் தக்கலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின்போது இடையிடையே பயங்கரவாதிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் காலை மற்றும் மதிய சாப்பாடு போலீஸ் நிலையத்துக்கே வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டது. பயங்கரவாதிகள் 2 பேரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்து அவர்களுக்கான மாற்று உடைகளும் கொண்டுவந்து கொடுக்கப்பட்டன.

கோர்ட்டில் ஆஜர்

இரவு 9 மணி அளவில் தக்கலை போலீஸ் நிலையத்தில் இருந்து குழித்துறை கோர்ட்டுக்கு ஒரு வேனில் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். 9.20 மணிக்கு மாஜிஸ்திரேட்டு ஜெயசங்கர் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசார் பயங்கரவாதிகளை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர்.

ஆனாலும் பயங்கரவாதிகள் இருவரையும் 20-ந் தேதி வரை காவலில் வைக்க வேண்டும் என்றும், அவர்களை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். உடனே போலீசார் அதே வேனில் பலத்த பாதுகாப்புடன் இருவரையும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்க அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.

Next Story