பொங்கல் பண்டிகையையொட்டி பிச்சாவரத்தில் படகு போட்டி


பொங்கல் பண்டிகையையொட்டி பிச்சாவரத்தில் படகு போட்டி
x
தினத்தந்தி 16 Jan 2020 11:00 PM GMT (Updated: 16 Jan 2020 9:26 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு போட்டி நடைபெற்றது.

அண்ணாமலைநகர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளையில் பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள உப்பனாற்றின் அருகில் மருத்துவ குணம் கொண்ட சுரபுன்னை காடுகள் அடர்ந்து காணப்படுகிறது. இந்த காடுகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்கள் உள்ளன. மருத்துவ குணம் நிறைந்த சுரபுன்னை காடுகளை பார்த்து ரசிப்பதற்காக வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

படகு போட்டி

தற்போது பொங்கல் விடுமுறையையொட்டி கடந்த 2 நாட்களாக பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு பயணிகளின் வருகை அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்தும் வகையிலும், பயணிகளை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக மேலாளர் அமுதவள்ளி பிச்சாவரத்தில் துடுப்பு படகு போட்டி நடத்த உத்தரவிட்டார். அதன்படி நேற்று துடுப்பு படகு போட்டி நடத்தப்பட்டது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பிச்சாவரம் கிளை மேலாளர் தினேஷ்குமார் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஒவ்வொரு படகிலும் 2 பேர் அமர்ந்து துடுப்பு போட்டனர்.

பரிசு

இதில் சென்னை கிண்டியை சேர்ந்த ஹரீஷ், ஞானம் ஆகியோர் முதல் இடத்தையும், திருவாரூரை சேர்ந்த அஜித்குமார், பாலாஜி ஆகியோர் 2-வது இடத்தையும், கோவையை சேர்ந்த ஷாஜகான், இம்ரான்கான் ஆகியோர் 3-வது இடத்தையும் பிடித்தனர். இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டலில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பரிசு கூப்பன் வழங்கப்பட்டது. 

Next Story