சின்னமனூர் அருகே துணிகரம்: விவசாயி வீட்டில் 24½ பவுன் நகை, பணம் திருட்டு
சின்னமனூர் அருகே விவசாயி வீட்டில் 24½ பவுன் நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சின்னமனூர்,
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரை சேர்ந்தவர் ஊர்க்காவலன். அவரது மகன் சமுத்திரவேல் (வயது 47). விவசாயி. சம்பவத்தன்று இவர், வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் பேரையூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் நகை, பணத்தை திருடிவிட்டு தப்பி சென்றனர். நேற்று காலை சமுத்திரவேல் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 24½ பவுன் நகைகள் மற்றும் 4 ஜோடி வெள்ளிக் கொலுசுகள், ரூ.80 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சின்னமனூர் போலீசில் சமுத்திரவேல் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசையை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்து கொண்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story