ஆரணியில் கட்டிட தொழிலாளி கொலை


ஆரணியில் கட்டிட தொழிலாளி கொலை
x
தினத்தந்தி 19 Jan 2020 4:30 AM IST (Updated: 19 Jan 2020 12:40 AM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி, 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி முள்ளிப்பட்டு கிராமம் செல்லும் வழியில் ஆற்றங்கரை அருகே உள்ள காவாங்கரையில் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக ஆரணி டவுன் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) சரவணன் மற்றும் உதவியாளர் பாபு ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது பிணத்தின் மார்பு பகுதியில் கடப்பாரையால் குத்தி இருப்பதும், கழுத்து அறுத்த நிலையிலும், ரத்தம் உறைந்த நிலையில் இருப்பதும் தெரிந்தது. அவர் கொலை செய்யப்பட்டு 2 நாட்கள் ஆகியிருக்கும் என தெரிகிறது.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்தவர் ஆரணி சைதாப்பேட்டை கமண்டல நாகநதி தெருவைச் சேர்ந்தவர் சுரே‌‌ஷ் (வயது 38), கட்டிட தொழிலாளி என்பது தெரிய வந்தது. மேலும் சுரேசுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நீண்ட நாட்களாக காதல் இருந்துள்ளது. ஆனால் அந்த பெண்ணுக்கும் வேறு ஒருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரே‌‌ஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? மற்றும் கொலையாளி யார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story