முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை


முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 19 Jan 2020 4:30 AM IST (Updated: 19 Jan 2020 2:41 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே முத்துமாரியம்மன் கோவிலில் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றனர்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜீஸ் நகரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் பூசாரி கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் கோவிலில் இருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணம் திருடப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோவிலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.

வலைவீச்சு

அப்போது நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த 2 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிக்கொண்டு சென்றதும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோவிலில் இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. உடைக்கப்பட்ட உண்டியல்களில் சுமார் ரூ.50 ஆயிரம் இருந்து இருக்கலாம் என கோவில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story