சுவர் விளம்பரங்கள் மாற்றி மாற்றி அழிப்பு: அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே மோதல் விழுப்புரத்தில் பரபரப்பு


சுவர் விளம்பரங்கள் மாற்றி மாற்றி அழிப்பு: அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே மோதல் விழுப்புரத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Jan 2020 11:00 PM GMT (Updated: 18 Jan 2020 10:20 PM GMT)

விழுப்புரத்தில் சுவர் விளம்பரங்களை மாற்றி மாற்றி அழித்ததில், அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விழுப்புரம்,

விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை நாளை(திங்கட்கிழமை) தி.மு.க. தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, விழுப்புரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார்.

இதையொட்டி மு.க.ஸ்டாலினை வரவேற்று, தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்களை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று விழுப்புரம் நகரில், கிழக்கு புதுச்சேரி ரோட்டில் ரெயில்வே மேம்பால சுவரில் நகர தி.மு.க. சார்பில் சுவர் விளம்பரம் எழுதுவதற்காக அக்கட்சியை சேர்ந்தவர்கள் சென்றனர்.

அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம்

ஆனால், அங்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதை பார்த்த தி.மு. க.வினர், அ.தி.மு.க.வினரின் சுவர் விளம்பரத்திற்கு மேல் டிஜிட்டல் பேனரில் செய்யப்பட்ட விளம்பரத்தை சுவரில் ஒட்டினர். மேலும் அந்த பாலத்தின் இருபுறமும் சுவர் மீது விளம்பர பேனர்களை ஒட்டி விட்டு அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதுபற்றி அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் அங்கு வந்தனர். அவர்கள் நாங்கள் வரைந்த சுவர் விளம்பரத்தை எப்படி மறைக்கலாம் என்று கூறி, தி.மு.க.வினரின் சுவர் விளம்பர பேனர்களை அங்கிருந்து கிழித்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து தி.மு.க. மாவட்ட பொருளாளர் புகழேந்தி, நகர செயலாளர் சக்கரை, துணை செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் அங்கு திரண்டனர். அப்போது இருகட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மோதல்

அப்போது, தி.மு.க.வினர் சுண்ணாம்பை கொண்டு, ரெயில்வே மேம்பாலத்தில் வரையப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவ படத்தை அழித்தனர். இதனால் அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டு, மோதலாக மாறியது. இதுபற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சென் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மோதலை தடுத்து நிறுத்தி அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

அப்போது, அங்கிருந்த தி.மு.க.வினர் சிலரை அ.தி.முக.வினரின் சுவர் விளம்பரத்தை அழித்ததாக கூறி போலீசார் வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, ரெயில்வே மேம்பாலத்தில் சுவர் விளம்பரம் செய்வதற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று கேட்டறிந்து, அதன் பின்னர் இங்குள்ள சுவர் விளம்பரங்கள் அகற்றப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் சுவர் விளம்பரம் வரையப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலத்தில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

Next Story