லத்தேரியில் துணிகரம்: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மனைவியை கொன்று நகை கொள்ளை - மர்மநபருக்கு வலைவீச்சு
லத்தேரி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மனைவியை கொன்று நகையை கொள்ளையடித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்,
காட்பாடியை அடுத்த லத்தேரி அருகே அரும்பாக்கம் ஊராட்சி சென்னாரெட்டியூரை சேர்ந்தவர் கண்ணையா. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மனைவி சரோஜா (வயது 70). கணவர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். இவரது தங்கை மகன் ரவீந்திரன் அவ்வப்போது வந்து பார்த்து தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரவீந்திரன் பக்கத்து ஊருக்கு சென்று விட்டார். சரோஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் மாலையில் ரவீந்திரன் வீட்டுக்கு வந்தார். அப்போது மெயின் கேட் பூட்டப்பட்டிருந்தது. ரவீந்திரன் சத்தம் போட்டு சரோஜாவை கூப்பிட்டார். ஆனால் அவர் வெளியே வரவில்லை. வெகு நேரமாகியும் அவர் வராததால் சந்தேகமடைந்த ரவீந்திரன் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் சென்றுள்ளார்.
அப்போது வீட்டினுள் சரோஜா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு குவிந்தனர்.
இதுகுறித்து லத்தேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்ததும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து மோப்பநாய் சிம்பா வரவழைக்கப்பட்டது. ஆனால் நாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.
பின்னர் போலீசார் சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-
முதல் கட்ட விசாரணையில் இந்த கொலையை தனிநபர் செய்திருக்கலாம் என்று கருதுகிறோம். வீட்டில் தனியாக சரோஜா இருப்பதை அறிந்த மர்மநபர் வீட்டுக்குள் புகுந்து இரும்பு ராடால் சரோஜாவின் தலையின் பின்பக்கத்தை தாக்கி கொலை செய்துள்ளார்.
மேலும் அவர் கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலி, ¾ பவுன் கம்மல்கள், 2 பித்தளை வளையல்களை ெகாள்ளையடித்துச் சென்றுள்ளார்.
சரோஜாவின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை வேகமாக இழுத்ததால், அவரது கழுத்தில் தங்கச்சங்கிலி இறுக்கியதற்கான காயம் உள்ளது. இந்த சம்பவம் பிற்பகலில் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. இந்த கொலையை ஒருவர் மட்டும் செய்தாரா அல்லது மர்மகும்பல் செய்துள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story