மாவட்டத்தில் 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் தகவல்


மாவட்டத்தில் 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 19 Jan 2020 11:00 PM GMT (Updated: 19 Jan 2020 7:10 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

சேலம்,

பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று சேலம் மாநகரில் நடைபெற்றது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட குமாரசாமிப்பட்டி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமில் கலெக்டர் ராமன் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீ‌‌ஷ், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன், மாநகர நல அலுவலர் பார்த்தீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் 312 துணை சுகாதார நிலையங்கள், 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 13 அரசு மருத்துவமனைகள், 18 தனியார் மருத்துவமனைகள், 181 பள்ளிகள், 1,387 அங்கன்வாடி மையங்கள், 44 சத்திரங்கள் மற்றும் சாவடிகள், 208 இதர முகாம்கள் என மொத்தம் 2,270 மையங்களில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் கூடுதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராமன் கூறியதாவது:-

2,270 மையங்கள்

போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நாடு முழுவதும் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதனையொட்டி சேலம் மாவட்டத்தில் 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 2,270 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இதுதவிர 9 ரெயில் நிலையங்கள், 52 பஸ் நிலையங்கள், 4 சுங்கச்சாவடிகள், 8 தியேட்டர்கள், சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் விழா நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட 77 போக்குவரத்து முகாம்கள் மூலமாகவும் போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமில் சேலம் மாவட்டத்தில் சுகாதாரத்துறையை சார்ந்த 1,145 பணியாளர்களும், சமூக நலம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகளை சார்ந்த 2,696 பணியாளர்களும், வருவாய் துறை மற்றும் கல்வித்துறையை சார்ந்த 270 பணியாளர்களும், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், செஞ்சிலுவை சங்க மாணவர்கள் உள்ளிட்ட 1,159 மாணவ, மாணவிகளும், ரோட்டரி கிளப்பை சார்ந்த 197 நபர்களும், தன்னார்வலர்கள் 3,974 நபர்களும் மற்றும் மேற்பார்வையாளர்கள் 499 நபர்களும் என மொத்தம் 9,940 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநகராட்சியில்

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் உள்பட 222 மையங்களில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 90 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளில் 1,500 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நாளில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. எனவே பொதுமக்கள் தங்களது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் தங்கள் குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாப்பதுடன், வருங்காலத்தில் போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும். பல்வேறு காரணங்களால் சொட்டு மருந்து வழங்கப்படாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக பணியாளர்கள் தொடர்ந்து 7 நாட்களுக்கு வீடு, வீடாக சென்று விடுபட்ட குழந்தைகளை கண்டறிந்து அக்குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story