மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள்தண்டனை - கோவை கோர்ட்டு தீர்ப்பு


மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள்தண்டனை - கோவை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 21 Jan 2020 4:30 AM IST (Updated: 20 Jan 2020 11:09 PM IST)
t-max-icont-min-icon

மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கோவை,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது27). இவர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே குன்னத்தூர் புதூர் பகுதியில் தங்கி கிடைக்கும் வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் விவசாயியின் 16 வயது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சதீஷ்குமார், அந்த மாணவியை அடிக்கடி பின்தொடர்ந்து சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார்.

இந்தநிலையில் கடந்த 15.2.2017 அன்று இரவு 11.30 மணியளவில் விவ சாய மோட்டாரை ‘ஆப்’ செய்வதற்காக, மாணவி வெளியே சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சதீஷ்குமார் திடீரென்று மாணவியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

பின்னர் மறுநாள் காலையில் மாணவியை அந்த பகுதியில்விட்டுவிட்டு சதீஷ்குமார் தப்பிச்சென்றார். இது குறித்து மாணவி தனது பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து கதறி அழுதார். பின்னர் பெற்றோர், மகளை மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்தனர். மாணவி பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து பெற்றோர் அன்னூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ வழக்குகள் விசாரணை தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி ராதிகா, குற்றம்சாட்டப்பட்ட சதீஷ்குமாருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் இந்த வழக்கில் வக்கீல் ஆர்.சரோஜினி ஆஜராகி வாதாடினார்.

Next Story