கூடலூர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கக்கோரி வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்


கூடலூர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கக்கோரி வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2020 4:00 AM IST (Updated: 20 Jan 2020 11:09 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கக்கோரி வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலூர், 

கூடலூரில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட மற்றும் கூடுதல் உரிமையியல் நீதிமன்றங்கள் உள்ளன. இதுதவிர பந்தலூரில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உள்ளது. ஆனால் இங்கு நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக கிடக்கிறது. இதனால் வழக்கு விசாரணை நடைபெறுவது இல்லை. மேலும் நீதிமன்ற பணிகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன்காரணமாக நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என கூடலூர் வக்கீல்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது. இது சம்பந்தமாக உயரதிகாரிகளை சந்தித்து பல்வேறு மனுக்களும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிபதிகள் நியமிக்கப்பட வில்லை.

இதனால் நீதிபதிகளை நியமிக்கக்கோரி வக்கீல்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வக்கீல்கள் சங்கம் அறிவித்து இருந்தது. அதன்படி கூடலூர் நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்க தலைவர் வர்கிஸ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜைனூல்பாபு முன்னிலை வகித்தார். வக்கீல்கள் கோ‌ஷிபேபி, சாக்கோ, சுரே‌‌ஷ் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 

போராட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் ஜெயாஜோசப், பரசுராமன் உள்பட அனைத்து வக்கீல்கள் கலந்து கொண்டனர். வக்கீல்களின் போராட்டத்தையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இது குறித்து வக்கீல்கள் சங்க செயலாளர் கூறியதாவது:- கடந்த 1½ ஆண்டுகளாக சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. 8 மாதங்களாக நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலும், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நீதிபதிகள் இல்லை. இதேபோல் பந்தலூர் நீதிமன்றத்திலும் நீதிபதி கிடையாது. இது சம்பந்தமாக துறை ரீதியாக பல்வேறு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையீடப்பட்டுள்ளது. ஆனால் நீதிபதிகள் நியமிக்கப்பட வில்லை.

இதனால் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. அதனால் நீதிமன்றங்களில் நீதிபதிகளை உடனடியாக நியமிக்க வேண்டும். இல்லையெனில் எங்களின் போராட்டத்தை நீட்டிக்க முடிவு செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story