சேலத்தில் பரபரப்பு ஓசூர் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி ரூ.11 லட்சம் பறிப்பு 4 பேர் கைது


சேலத்தில் பரபரப்பு ஓசூர் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி ரூ.11 லட்சம் பறிப்பு 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 Jan 2020 10:15 PM GMT (Updated: 20 Jan 2020 7:49 PM GMT)

சேலத்தில் ஓசூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி ரூ.11 லட்சம் பறித்த சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொண்டலாம்பட்டி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 45). ரியல் எஸ்டேட் அதிபர். ஒரு மாதத்திற்கு முன்பு இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் சேலம் கொண்டலாம்பட்டியில் இருந்து பேசுகிறோம். எங்களுக்கு ஓசூரில் நிலம் வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு சத்தியமூர்த்தி ஓசூரில் நிலம் உள்ளது. நேரில் வந்து பார்க்கவும் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து 8 பேர் கொண்ட கும்பல் ஓசூர் சென்று நிலத்தை பார்த்தது. பின்னர் அந்த நிலத்திற்கு விலைபேசி அந்த நிலத்தை வாங்கிக்கொள்வதாக கூறி விட்டு வந்தது. கடந்த 12-ந்தேதி சத்தியமூர்த்தி செல்போனுக்கு மீண்டும் தொடர்பு கொண்ட அந்த கும்பல் கொண்டலாம்பட்டிக்கு வந்து நிலத்திற்கான முன்பணத்தை வாங்கிச்செல்லும் படி கூறியுள்ளது. இதை நம்பிய அவர் சேலம் கொண்டலாம்பட்டிக்கு வந்தார்.

கடத்தல்

அப்போது 8 பேர் கொண்ட கும்பல் சத்தியமூர்த்தியை காரில் கடத்தி சென்றது. பின்னர் அவரை ஒரு இடத்தில் ஒருவாரமாக தனியாக அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டியது. முதலில்பணம் இல்லை என்று சத்தியமூர்த்தி மறுத்து உள்ளார். ஆனால் அந்த கும்பல் அவரை தொடர்ந்து மிரட்டியது. இதனால் பயந்த அவரிடம் அந்த கும்பல் ரூ.11 லட்சத்தை பறித்துக்கொண்டது. இந்த நிலையில் அந்த கும்பல் அவரை நேற்று காலை கொண்டலாம்பட்டி பகுதியில் விட்டு விட்டு காரில் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசில் சத்தியமூர்த்தி புகார் செய்தார். அதில், தன்னிடம் நிலம் வாங்குவதாக சிலர் தெரிவித்ததால் முன்பணம் வாங்க வந்தபோது ஒரு கும்பல் கடத்தி சென்றுவிட்டது. அவர்கள் ஒரு வாரம் அடைத்து வைத்து மிரட்டி ரூ.11 லட்சம் பறித்து கொண்டதாகவும், இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

4 பேர் கைது

அதில், ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி சென்றது அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் என்பதும், இந்த கடத்தலுக்கு செவ்வாய்பேட்டையை சேர்ந்த பாபு (35) என்பவர் தலைவனாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

நேற்று மதியம் சேலம் செவ்வாய் பேட்டையை சேர்ந்த ஜீவா (36), கோபால் (29), சதீஸ்குமார் (20), கவுரிசங்கர் (33) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சேலத்தில் ஓசூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி ரூ.11 லட்சம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story