சொந்த ஊரான கோவிந்தபேரியில் பி.எச்.பாண்டியனுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


சொந்த ஊரான கோவிந்தபேரியில் பி.எச்.பாண்டியனுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 22 Jan 2020 4:30 AM IST (Updated: 22 Jan 2020 12:27 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனுக்கு அவரது சொந்த ஊரான கோவிந்தபேரியில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்று படத்திறப்பு விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

நெல்லை,

அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான மறைந்த பி.எச்.பாண்டியன் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி ஆகும். அங்கு அவரது உருவப்படம் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி தலைமை தாங்கினார்.

பி.எச்.பாண்டியன் மகனும், அமைப்பு செயலாளருமான மனோஜ் பாண்டியன் வரவேற்று பேசினார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பி.எச்.பாண்டியன் படத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் மறைவுக்கு அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.

விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தலைவர்களுடன் நெருங்கி பழகியவர்

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை தொடங்கி வைத்தார். அவர் மறைவுக்கு பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க.வை வழி நடத்தினார். இந்த இரண்டு தலைவர்களுடனும் நெருங்கி பழகியவர் பி.எச்.பாண்டியன்.

எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் எம்.எல்.ஏ.வாகவும், துணை சபாநாயகராகவும், சபாநாயகராகவும் பதவி வகித்தவர். 4 முறை சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாடாளுமன்றத்திலும் பணியாற்றி உள்ளார். தனது திறமை, அறிவாற்றலால் டெல்லியிலும் புகழ் பெற்று இருந்தார்.

1½ கோடி தொண்டர்கள்

எம்.ஜி.ஆர். 3 முறை முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன்பிறகு ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பு வகித்தார். 1½ கோடி தொண்டர்கள் கொண்ட ஒரு இயக்கம் அ.தி.மு.க. ஆகும். இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

ஜெயலலிதா மறைந்தபோது, கட்சியில் பல்வேறு கருத்துக்கள் வெளியானது. அப்போது தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் ஆட்சி வரக் கூடாது என முதன்முதலில் குரல் கொடுத்தவர் பி.எச்.பாண்டியன். அவர் எந்த நேரத்திலும் தொண்டர்களை பற்றி சிந்திக்க கூடியவர்.

நினைவு மண்டபம்

பி.எச்.பாண்டியனுக்கு சொந்த ஊரான கோவிந்தபேரியில் நினைவு மண்டபம் கட்டப்படும். அந்த மண்டபத்தை நானே முன்னின்று கட்டுவேன். அந்த மண்டபம் ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். பி.எச்.பாண்டியன் புகழ் என்றைக்கும் நிலைத்து நிற்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, கே.டி.ராஜேந்திர பாலாஜி. வி.எம்.ராஜலட்சுமி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் பேசினார்கள்.

குடும்பத்தினர்

நேற்று நடந்த விழாவில் மேடை முன்பு பி.எச்.பாண்டியன் மகன்கள் அரவிந்த் பாண்டியன், மனோஜ் பாண்டியன், நவீன் பாண்டியன், வினோத் பாண்டியன், மகள் தேவமணி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்கார்ந்து இருந்தனர். விழாவில் முடிவில் அவர்கள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர்.

விழாவில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story