ஆட்டோ டிரைவர்கள் கூடுதல் கட்டணம் வசூல் ரெயில், பஸ் நிலையங்களில் போலீஸ் அதிரடி


ஆட்டோ டிரைவர்கள் கூடுதல் கட்டணம் வசூல் ரெயில், பஸ் நிலையங்களில் போலீஸ் அதிரடி
x
தினத்தந்தி 22 Jan 2020 4:30 AM IST (Updated: 22 Jan 2020 3:34 AM IST)
t-max-icont-min-icon

அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலித்ததாக வந்த புகாரை அடுத்து ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற் கொண்டனர்.

புதுச்சேரி,

புதுவை நகரில் பெரும்பாலான இடங்களுக்கு டவுன் பஸ் சேவைகள் கிடையாது. எனவே பொதுமக்கள் டெம்போ மற்றும் ஆட்டோவையே நம்பி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து துறை நிர்ணயித்த விலையை விட மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

இது குறித்து புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலரும், பொதுமக்களும் கவர்னருக்கு புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும் படி போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீ வஸ்தவாவுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் மேற்பார்வையில், ஒதியஞ்சாலை மற்றும் உருளையன்பேட்டை போலீசார் நேற்று இரவு ரெயில் நிலையம், புதிய பஸ்நிலையத்தில் உள்ள ஆட்டோ நிற்கும் இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கடும் நடவடிக்கை

அப்போது அங்கிருந்து புறப்பட்டு சென்ற ஆட்டோக்களை நிறுத்தி உரிய ஆவணங்கள் முறையாக உள்ளதா? சீருடை அணிந்து இருக்கிறார்களா? என்று சோதனை நடத்தினர். பின்னர் ஆட்டோவில் இருந்த பயணிகளிடம் எங்கே செல்கின்றீர்கள்? அதற்கு ஆட்டோ டிரைவர்கள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கின்றனர்? என்று விசாரணை நடத்தினர்.

அப்போது ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட சற்று அதிகம் வசூல் செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் ஆட்டோ டிரைவர்களிடம், இனி அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story