ஆனைமலையில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.46½ லட்சம் மோசடி - மேலாளர் உள்பட 2 பேர் கைது
ஆனைமலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.46½ லட்சம் மோசடி செய்த மேலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த மீனாட்சிபுரத்தில் கேரளாவை தலைமையிடமாக கொண்டு தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு பாலக்காடு அருகே பாட்டஞ்சேரியை சேர்ந்த லட்சுமி (வயது 35) என்பவர் மேலாளராக வேலை செய்து வந்தார். கேரளா சொர்னூரை சேர்ந்த பிஜூ (43) நகை மதிப்பீட்டாளராகவும், சுபா என்பவர் உதவி மேலாளராகவும், விக்னேஷ் என்பவர் ஊழியராகவும் பணியாற்றி வந்தனர்.
அந்த நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25-ந் தேதி உயர் அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது 5 கிலோ 804 கிராம் தங்க நகை இருந்தது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் மீண்டும் தணிக்கை செய்தனர். அப்போது 1 கிலோ 150 கிராம் தங்கநகை குறைவாக இருந்தது.
இது பற்றி கிளை மேலாளர் லட்சுமியிடம் விசாரணை நடைபெற்றது. அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அங்குள்ள ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். இதில், போலி ஆவணங்கள் தயார் செய்து ரூ.46½ லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது.
இந்த மோசடியில் லட்சுமிக்கு தொடர்பு இருந்ததும், இதற்கு உடந்தை யாக பிஜூ, சுபா, விக்னேஷ் ஆகியோர் செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவர்கள் 4 பேரையும் வேலையை விட்டு அந்த நிதி நிறுவன நிர்வாகம் நீக்கியது. பின்னர் அவர்கள் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த தனியார் நிதி நிறுவனம் சார்பில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் லட்சுமி, பிஜூ உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் லட்சுமி, பிஜூ ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள சுபா, விக்னேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story