சமயபுரம், பொன்மலை, துறையூரில் சாலை பாதுகாப்பு வாரவிழா


சமயபுரம், பொன்மலை, துறையூரில் சாலை பாதுகாப்பு வாரவிழா
x
தினத்தந்தி 23 Jan 2020 4:15 AM IST (Updated: 23 Jan 2020 2:26 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம், பொன்மலை, துறையூரில் சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்பட்டது.

பொன்மலைப்பட்டி,

சமயபுரத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழா நேற்று டோல்பிளாசா அருகே கொண்டாடப்பட்டது. ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவை சார்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன் தலைமை தாங்கினார். லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் முன்னிலை வகித்தார்.

விழாவில் சாலை விபத்துகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். கார் போன்ற வாகனங்கள் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிந்து செல்லவேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடியை கடந்து சென்ற நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனை

இவ்விழாவில் அரசு பஸ் டிரைவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் அவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனையும் உடல் பரிசோதனையும் செய்யப்பட்டது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலக அலுவலர்கள் வெங்கடகிருஷ்ணன், பாண்டியன், மோட்டார் வாகன ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் போலீசார் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு ஊர்வலம்

பொன்மலை சரக போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து போலீசார் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். ஊர்வலத்தை பொன்மலை சரக உதவி கமிஷனர் பாலமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, ரமேஷ், பெரியய்யா, சரஸ்வதி மற்றும் அரியமங்கலம், பொன்மலை மற்றும் ஏர்போர்ட் போலீசார் சுமார் 80 பேர் ஹெல்மெட் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.

அப்போது, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் வாகனங்களில் பொருத்தி இருந்தனர். அரியமங்கலத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் பொன்மலை வழியாக ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு, காவேரி நகர் வந்து நிறைவடைந்தது. ஊர்வலத்தின் போது ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் அவசியத்தை குறித்த துண்டு பிரசுரங்களையும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் வழங்கினர்.

ரோஜாப்பூ

இதுபோல் பாய்லர் ஆலை போலீஸ் நிலையம் சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு விழாவுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமை தாங்கினார். பாய்லர் ஆலை வளாகத்துக்கு உட்பட்ட கணேசா ரவுண்டானா பகுதியில் சாலை விதிமுறைகளை கடைபிடிக்காமல் வந்த பாய்லர் ஆலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் துறையூரில் வட்டார மோட்டார் வாகன போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை சார்பில் சாலைபாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தை முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன், துறையூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார், போக்குவரத்துஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கிவைத்தனர். இதில் கல்லூரி மாணவர்கள், சுற்றுலா வேன் உரிமையாளர்கள் சங்கத்தினர், துறையூர் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர்,டிரைவிங் ஸ்கூல் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Next Story