குடியரசு தின விழாவை சீர்குலைக்க திட்டமா? சப்-இன்ஸ்பெக்டரை கொன்ற பயங்கரவாதிகளிடம் போலீஸ் துருவி துருவி விசாரணை


குடியரசு தின விழாவை சீர்குலைக்க திட்டமா? சப்-இன்ஸ்பெக்டரை கொன்ற பயங்கரவாதிகளிடம் போலீஸ் துருவி துருவி விசாரணை
x
தினத்தந்தி 23 Jan 2020 4:45 AM IST (Updated: 23 Jan 2020 2:36 AM IST)
t-max-icont-min-icon

குடியரசு தின விழாவை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளனரா? என்பது குறித்து சப்-இன்ஸ்பெக்டரை கொன்ற பயங்கரவாதிகளிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தைரோடு சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி பணியில் இருந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 பேரும் கடந்த 20-ந் தேதி நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

2 பேரையும் 28 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிகோரி போலீஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய கோர்ட்டு 10 நாட்கள் போலீஸ் காவல் கொடுத்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் 2 பேரையும் நேசமணிநகர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணையை தொடங்கினர். முதலில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் 2 மணி நேரமாக தொடர் விசாரணை நடத்தினார். அதன்பிறகு மற்ற போலீஸ் அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்தனர்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்தி ஆகியவை இன்னும் கைப்பற்றப்படவில்லை. எனவே அவை எங்கு உள்ளன? என்று பயங்கரவாதிகளிடம் கேட்கப்பட்டது. யாரிடமும் கொடுத்து வைத்துள்ளார்களா? அல்லது மறைத்து வைத்து இருக்கிறார்களா? என்றும் கேட்கப்பட்டது.

வெளிமாநில தொடர்பு

மேலும் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார்? கொலைக்கான திட்டத்தை வகுத்து கொடுத்தது யார்? என்றும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். கடந்த டிசம்பர் மாதம் முதல் தவுபிக் தலைமறைவாக இருந்து வந்தார். எனவே அவர் எங்கு பதுங்கி இருந்தார்? அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? உள்ளிட்ட விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள். போலீசாரின் கேள்விகளுக்கு இருவரும் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பயங்கரவாதிகள் 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்தபோது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தென் தமிழகத்தில் நாசவேலையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. எனவே எந்த மாதிரியான சதித்திட்டம் நடத்தப்பட இருந்தது? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அப்துல் சமீம் மற்றும் தவுபிக் ஆகிய 2 பேருக்கும் வெளிமாநில தொடர்பு இருந்தது. அதனால்தான் கேரளாவில் இருந்து கர்நாடகா வழியாக வடமாநிலங்களுக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

குடியரசு தின விழாவை சீர்குலைக்க திட்டமா?

எனவே 2 பேரிடமும் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் குடியரசு தினவிழாவை சீர்குலைக்க ஏதேனும் திட்டமிட்டு உள்ளனரா?. அப்படி என்றால் இந்த சதி செயலில் ஈடுபட இருப்பவர்கள் யார்? அவர்கள் எங்கு எல்லாம் உள்ளனர் என்பது குறித்தும் பயங்கரவாதிகளிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கொலை சம்பவம் நடந்த இடம் மற்றும் அவர்கள் தப்பிச் சென்ற இடங்களுக்கும் 2 பேரையும் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். 

Next Story