களியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி கேரளாவில் மீட்பு


களியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி கேரளாவில் மீட்பு
x
தினத்தந்தி 24 Jan 2020 4:45 AM IST (Updated: 23 Jan 2020 11:24 PM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி கேரளாவில் மீட்கப்பட்டது. பயங்கரவாதிகள் சாக்கடையில் வீசியதை போலீசார் தேடி கண்டுபிடித்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 8-ந் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் கொலை தொடர்பாக குமரி மாவட்டம் திருவிதாங்கோடு அடப்புவிளை பதார் தெருவைச் சேர்ந்த அப்துல் சமீம் (வயது 29), நாகர்கோவில் கோட்டார் மாலிக் தினார் நகர் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த தவுபிக் (27) ஆகிய 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

உபா சட்டம் பாய்ந்தது

இதற்கிடையே கடந்த 14-ந் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பியில் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரும் வடமாநிலங்களுக்கு தப்பி செல்ல முயன்ற போது போலீசாரிடம் சிக்கினர். குமரி மாவட்ட போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து குழித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அவர்கள் 2 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்தது.

இதனால் 2 பேரையும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு கோர்டில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்யவும், அவர்களுடைய பின்னணி குறித்த விவரங்களை அறியவும் 28 நாள் போலீஸ் காவலில் அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த கோர்ட்டு 10 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

திடுக்கிடும் தகவல்கள்

கடந்த 21-ந் தேதி மாலை முதல் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதலில் அவர்களை நாகர்கோவில் நேசமணிநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், துணை சூப்பிரண்டும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியுமான கணேசன் மற்றும் கியூ பிரிவு போலீஸ் அதிகாரிகள், உளவுத்துறை போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது 2 பேரும் போலீசாரின் சரமாரியான கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்ததோடு, பல திடுக்கிடும் தகவல்களையும் வெளியிட்டனர்.

அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரும் தங்களுக்கு தலைவராக கடலூரைச் சேர்ந்த காஜாமுகைதீன் என்பவர் இருந்து வந்ததாகவும், அவர் சொல்வதைத்தான் தாங்கள் செய்ததாகவும் கூறியுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கில் காஜாமுகைதீனும், அப்துல் சமீமும் ஒன்றாக ஜெயிலில் இருக்கும்போது பழக்கம் ஏற்பட்டது என்றும், அது முதல் அப்துல் சமீம் அவரது தலைமையில் செயல்பட முடிவு செய்து, குடியரசு தினத்தன்று அசம்பாவித சம்பவங்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காஜாமுகைதீன் தலைமையிலான பிரிவில் தவுபிக்கையும் அப்துல் சமீம் சேர்த்துள்ளார்.

கால்வாயில் வீசினர்

அவ்வாறு செயல்பட்டு வந்த தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக போலீசார் கைது செய்து வந்தனர். இதனால் போலீசாருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கத்தோடு களியக்காவிளை சோதனைச்சாவடியில் இரவுப்பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்தோம். இந்த கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை பெங்களூருவில் போலீசாரால் கைது செய்யப்பட்ட மெகபூப் பாஷா என்ற அப்துல்லா வாங்கிக் கொடுத்தார் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

வில்சனை கொலை செய்தபிறகு களியக்காவிளையில் இருந்து திருவனந்தபுரம் சென்றுள்ளனர். செல்லும் வழியிலேயே வில்சன் கொலைக்கு பயன்படுத்திய வெட்டுக்கத்தியை வீசிவிட்டுச் சென்றதாக தெரிகிறது. ஆனால் துப்பாக்கி தங்களது பாதுகாப்புக்கு தேவைப்படும் என்று எண்ணி அதை மறைத்து வைத்துக் கொண்டனர். திருவனந்தபுரத்தில் இருந்து பஸ்சில் ஏறிய அவர்கள் மறுநாள் காலை எர்ணாகுளத்துக்கு சென்றுள்ளனர். அப்போதுதான் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடுவது செய்தித்தாள்கள் மூலம் தெரிய வந்தது. இதனால் போலீசாரின் சோதனையில் துப்பாக்கி இருப்பது தெரிய வந்தால் மாட்டிக்கொள்வோம் என்று அவர்கள் எண்ணினர். இதனால் தவுபிக் வைத்திருந்த துப்பாக்கியை எர்ணாகுளம் பஸ் நிலையம் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் வீசிவிடுமாறு அப்துல் சமீம் கூறியுள்ளார். அதன்படி தவுபிக் சாக்கடை கால்வாயில் துப்பாக்கியை வீசியுள்ளார். அதன்பிறகு அவர்கள் திருச்சூர் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு சென்றனர். இந்த தகவலையும் அவர்கள் போலீசாரின் விசாரணையின்போது தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி மீட்பு

நேற்று முன்தினம் இரவு அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் போலீசார் கேரள மாநில பகுதிக்கு அழைத்து சென்றனர். அதாவது கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, வெட்டுக்கத்தி ஆகியவற்றை மீட்பதற்காக அவர்களை அழைத்து சென்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் இருவரையும் நேற்று காலை எர்ணாகுளம் அழைத்து சென்றனர். பின்னர் துப்பாக்கி வீசிய இடத்தை காண்பிக்குமாறு முதலில் தவுபிக்கை போலீசார் அழைத்துச் சென்றனர். அவர் எர்ணாகுளம் பஸ் நிலையம் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் துப்பாக்கியை வீசி எறிந்த இடத்தை காண்பித்தார். அந்த கால்வாய்க்குள் சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் மற்றும் அப்பகுதி துப்புரவு பணியாளர்கள் இறங்கி துப்பாக்கியை தேடினர். சுமார் 1 மணி நேரத்துக்குப்பிறகு தவுபிக் வீசிய துப்பாக்கி சிக்கியது. போலீசார் அந்த துப்பாக்கியை மீட்டனர். அதில் பயன்படுத்தப்படாத 5 தோட்டாக்களும் இருந்தன.

அதைத்தொடர்ந்து அப்துல் சமீமை அந்த இடத்துக்கு அழைத்துச் சென்று தவுபிக் எந்த இடத்தில் இருந்து கால்வாய்க்குள் துப்பாக்கியை வீசினார் என்பது குறித்து விசாரித்தனர். அப்போது அவர் நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கமாக கூறினார். அதன்பிறகு அவர்கள் 2 பேரையும் உள்ளூர் போலீசார் உதவியுடன் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் சென்று மீண்டும் விசாரணை நடத்தினர். அதன்பிறகு இருவரையும் போலீசார் திருச்சூருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

ராணுவத்துக்கு பயன்படுத்தக்கூடியது

சாக்கடை கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி 7.65 மி.மீ. தானியங்கி (ஆட்டோமெட்டிக்) ரக பிஸ்டல் ஆகும். இது இத்தாலியில் தயாரிக்கப்பட்டது. இந்த துப்பாக்கியை இத்தாலியில் ராணுவத்தினர் மட்டுமே பயன்படுத்தக் கூடியது என்று அதில் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த துப்பாக்கியில் பயன்படுத்தப்படாத 5 தோட்டாக்களும் இருந்தன. இந்த துப்பாக்கி மொத்தம் 10 தோட்டாக்கள் வரை பயன்படுத்தக்கூடியதாகும் என்று வில்சன் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியும், துணை போலீஸ் சூப்பிரண்டுமான கணேசன் கூறினார்.


Next Story