த.மு.மு.க.-ம.ம.க. சார்பில் நல உதவிகள் - ஜவாஹிருல்லா வழங்கினார்


த.மு.மு.க.-ம.ம.க. சார்பில் நல உதவிகள் - ஜவாஹிருல்லா வழங்கினார்
x
தினத்தந்தி 24 Jan 2020 3:45 AM IST (Updated: 24 Jan 2020 4:45 AM IST)
t-max-icont-min-icon

ஏழை, எளியோருக்கு த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் நல உதவிகளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வழங்கினார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஏழைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் ரவிசந்திர ராமவன்னி, ராமநாதபுரம் யூனியன் தலைவர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு ஏழை, எளியோருக்கு நல உதவிகளை வழங்கினார். இதில் மண்டபத்தை சேர்ந்த அக்பர் என்பவருக்கு சுயதொழிலுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.30 ஆயிரம், ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியை சேர்ந்த அலி மற்றும் சகுபர் ஆகியோருக்கு கல்வி உதவி தொகை தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது.

இதேபோல ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் 100-க்கும் மேற்பட்டோருக்கு ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்குவதற்கான நிதி உதவியும், திருப்புல்லாணி மேலப்புதுக்குடி அரசு தொடக்கப்பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மேஜை, நாற்காலி உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில செயலாளர்கள் சலீமுல்லாகான், தொண்டி சாதிக், மாவட்ட தலைவர் பட்டாணி மீரான், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் வக்கீல் ஜிப்ரி, ம.ம.க. மாவட்ட செயலாளர் கீழை முஜீப், மாவட்ட துணை தலைவர் வக்கீல் ஆசிக், மீனவரணி சரிபு, மாவட்ட துணை செயலாளர் சுல்தான் சாகுல்ஹமீது, ரைஸ் இபுராகீம், மருத்துவ அணி செயலாளர் யாசர், த.மு.மு.க. ஊடகத்துறை யாசர் அரபாத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நகர் தலைவர் அப்துல் ரகீம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

Next Story