தாய், மகனை கொன்ற பூ வியாபாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - புதுவை கோர்ட்டு தீர்ப்பு


தாய், மகனை கொன்ற பூ வியாபாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - புதுவை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 25 Jan 2020 4:15 AM IST (Updated: 25 Jan 2020 1:19 AM IST)
t-max-icont-min-icon

தாய், மகனை கொலை செய்த பூ வியாபாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுச்சேரி, 

புதுச்சேரி வானரப்பேட்டை நாகமுத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் குணவதி(வயது 37). பூ வியாபாரம் செய்து வந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த பிரபாகரன்(32) என்பவர் புதுசாரம் பகுதியில் தங்கி இருந்து பூ வியாபாரம் செய்து வந்தார். பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளது. அதனை அவர் மறைத்து குணவதியுடன் பழகி வந்தார்.

இந்தநிலையில் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த நிலையில் குணவதி கர்ப்பமானார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சதீஷ்குமார் என்று பெயர் சூட்டினர். அதன்பின்னர் தான் பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது குணவதிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பிரபாகரனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த 25-11-2017 அன்று தட்டாஞ்சாவடியில் உள்ள சுப்பையா நகருக்கு குணவதியை குழந்தையுடன் பிரபாகரன் வரவழைத்தார். அங்கிருந்து அவர்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கிளியனூர் அருகே உள்ள சித்தேரி பகுதிக்கு அழைத்துச்சென்றார். அங்கு குணவதியையும், அவரது மகனையும் கழுத்தை நெரித்து கொலை செய்து பிணங்களை வீசினார். பின்னர் தனது வீட்டுக்கு சென்று விட்டார்.

இது குறித்து குணவதியின் சகோதரர் குருமூர்த்தி அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து அவரிடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர். பின்னர் குணவதி, அவரது மகன் சதீஷ்குமார் ஆகியோரின் பிணங்களை மீட்டனர். இதையடுத்து பிரபாகரனை காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து புதுச்சேரி 2-வது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கோரிமேடு போலீசார் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு நீதிபதி சுபா அன்புமணி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே பிரபாகரன் ஜாமீனில் வெளியே வந்தார். விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் தாய், மகனை திட்டமிட்டு கொலை செய்ததற்காக இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து பிரபாகரன் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story