குரூப்–4 தேர்வில் முறைகேடு: நெல்லையில் இடைத்தரகர் சிக்கினார் - மற்றொருவருக்கு வலைவீச்சு


குரூப்–4 தேர்வில் முறைகேடு: நெல்லையில் இடைத்தரகர் சிக்கினார் - மற்றொருவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 26 Jan 2020 4:30 AM IST (Updated: 25 Jan 2020 7:03 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கி உள்ளார். மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

வள்ளியூர், 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்–4 தேர்வு நடத்தப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடைபெற்ற தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இவர்களை தேர்ச்சி பெறச் செய்தவர்கள், இடைத்தரகர்கள் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொடர்புடைய பலரையும் தேடி வருகின்றனர்.

இதில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள விஜயாபதி கிராமத்தை சேர்ந்த சுயம்பு மகன் அய்யப்பன் (வயது 35) மற்றும் அருகில் உள்ள ஆவுடையாள்புரம் கிராமத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் ஆகிய 2 பேரும் தேர்ச்சி பெற்ற விவரம் தெரியவந்தது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விஜயாபதி கிராமத்துக்கு அதிரடியாக வந்தனர். அவர்கள் அங்கிருந்த அய்யப்பனை மடக்கிப்பிடித்தனர். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர் அங்கு சலுன் கடை நடத்திக் கொண்டு நிலத்தரகராகவும் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. குரூப்–4 தேர்வில் இவரும் தேர்ச்சி பெற்றதோடு, சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு தேர்ச்சிப் பெற இடைத்தரகாகவும் செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் முறைகேடு நடந்தது குறித்து முழுமையாக விசாரணை நடத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் ராமநாதபுரத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எத்தனை பேருக்கு இதில் தொடர்பு இருக்கிறது? என்ற தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதுதவிர தேர்ச்சி பெற்றுள்ள ஆவுடையாள்புரத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் திடீரென்று தலைமறைவாகி விட்டார். அவர் ரூ.12 லட்சம் வரை கொடுத்து இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அது தொடர்பாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி முத்துராமலிங்கத்தை தேடி வருகின்றனர்.

Next Story