குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: துள்ளிப்பாய்ந்த காளைகளை அடக்க போராடிய காளையர்கள்


குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: துள்ளிப்பாய்ந்த காளைகளை அடக்க போராடிய காளையர்கள்
x
தினத்தந்தி 26 Jan 2020 4:00 AM IST (Updated: 25 Jan 2020 11:19 PM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் துள்ளிப்பாய்ந்த காளைகளை அடக்க காளையர்கள் போராடினார்கள். இதில் மாடுகள் முட்டியதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நல அறக்கட்டளை சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதற்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிரு‌‌ஷணன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் நாமக்கல், மதுரை, திண்டுக்கல், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 628 காளைகள் கலந்து கொண்டன. ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பு மாடுபிடி வீரர்கள் அமைச்சர்கள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மாடுகளை பரிசோதனை செய்ய 5 கால்நடை மருத்துவ குழுக்களும், மாடுபிடி வீரர்களை பரிசோதனை செய்ய 6 மருத்துவ குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. கடும் சோதனைக்கு பிறகே மாடுபிடி வீரர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

காலை 9 மணி அளவில் வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையின் கயிறு அறுத்து விடப்பட்டன. அவை தங்களை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களை தூக்கி வீசும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. துள்ளிப்பாய்ந்த காளைகளை அடக்க காளையர்கள் போராடினார்கள். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு மின்விசிறி, நாற்காலி, வயர் கட்டில்கள், குடம், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. இதேபோல் ஜல்லிக்கட்டில் அடக்க முடியாத மாடுகளுக்கும், அவற்றின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டன. வாடிவாசலில் இருந்து வெளியே வரும் பெரும்பாலான மாடுகள் ஓட்டம் பிடித்து விட்டாலும், ஒரு சில மாடுகள் மீண்டும் வாடிவாசலை நோக்கி வந்து, வீரர்களை பயமுறுத்துவதை காண முடிந்தது.

இவ்வாறு திரும்பி வந்த காளை ஒன்று மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரனை முட்டி தள்ளியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவருக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் மாடுபிடி வீரர்கள் திலீப், விக்கி, நவீன், ராஜா, சத்யா மற்றும் பார்வையாளர்கள் கணேசன், மொய்தீன் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் குமாரபாளையம் மற்றும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் இந்த ஜல்லிக்கட்டில் 20-க்கும் மேற்பட்டவர்கள் லேசான காயம் அடைந்தனர்.

கோலாகலமாக நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டை காண குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டும் இன்றி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் இருந்தும், சேலம், ஈரோடு மாவட்டங்களில் இருந்தும் திரளான பொதுமக்கள் அங்கு கூடி இருந்தனர். ஜல்லிக்கட்டில் 631 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் சுழற்சி முறையில் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர். அடங்க மறுத்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க மல்லுக்கட்டினர். இதை கண்டு ரசித்த பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து, மாடுபிடி வீரர்களை ஊக்கப்படுத்தியவாறு இருந்தனர். இந்த ஜல்லிக்கட்டில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 6 காளைகள் கலந்து கொண்டன. இந்த காளைகளை யாரும் அடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இதேபோல் தீயணைப்பு வீரர்களும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாத்துரை தலைமையில் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

இதில் எம்.எல்.ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், ஜல்லிக்கட்டு அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story