வாக்களிப்பதன் அவசியம் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - விழாவில் கலெக்டர் பேச்சு


வாக்களிப்பதன் அவசியம் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - விழாவில் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 25 Jan 2020 10:15 PM GMT (Updated: 25 Jan 2020 5:58 PM GMT)

வாக்களிப்பதன் அவசியம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தேசிய வாக்காளர் தின விழாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

ஊட்டி, 

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தேசிய வாக்காளர் தின விழா ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். மேலும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இடையே நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் இடையே நடந்த கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதிய வாக்காளர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். வெளியிடங்களில் இருந்து நீலகிரியில் தங்கி பணிபுரிபவர்கள் தங்களது சொந்த ஊர்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். வாக்களிக்கும் நாளில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் பிரச்சினை ஏற்படும். எனவே, பட்டியலில் பெயர் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

வருகிற பிப்ரவரி மாதம் 14-ந் தேதி வெளியிடப்பட உள்ள வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்கள் உள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்னர் அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்கள் மற்றும் இ-சேவை மையங்களில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ளலாம். பள்ளி மாணவ- மாணவிகளிடம் பள்ளி பருவத்திலேயே வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் தாமாகவே வாக்களிக்க முன் வர வேண்டும்.

1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு வாக்காளர் தொடர்பான குறைகள், கருத்துகள், தகவல்கள் குறித்து தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக தேசிய வாக்காளர் தினத்தையொட்டி உறுதிமொழி எடுக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர்களை சேர்த்த இளம் வாக்காளர்கள் கவுரவிக்கப்பட்டதுடன், புத்தகங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் வெலிங்டன் பாளைய வாரிய தலைமை செயல் அதிகாரி பூஜா பலிச்சா, மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, ஊட்டி ஆர்.டி.ஓ. சுரே‌‌ஷ் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Next Story