ரஜினிகாந்த் ஆன்மிகம் தழுவிய அரசியலுக்கு வர வேண்டும் - விசுவ இந்து பரிஷத் முன்னாள் செயல் தலைவர் வேதாந்தம் பேட்டி


ரஜினிகாந்த் ஆன்மிகம் தழுவிய அரசியலுக்கு வர வேண்டும் - விசுவ இந்து பரிஷத் முன்னாள் செயல் தலைவர் வேதாந்தம் பேட்டி
x
தினத்தந்தி 25 Jan 2020 10:45 PM GMT (Updated: 25 Jan 2020 6:57 PM GMT)

ரஜினிகாந்த் ஆன்மிகம் தழுவிய அரசியலுக்கு வர வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் முன்னாள் செயல் தலைவர் வேதாந்தம் கன்னியாகுமரியில் கூறினார்.

கன்னியாகுமரி,

விசுவ இந்து பரிஷத் முன்னாள் செயல் தலைவரும், கிராம கோவில் பூசாரி பேரவை நிர்வாக அலுவலருமான வேதாந்தம் நேற்று கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ரஜினிகாந்த் குறித்து சில அரசியல் கட்சி தலைவர்கள் தவறான குற்றசாட்டுடன் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். ரஜினிகாந்்த் நல்ல காரியம்தான் செய்துள்ளார். திராவிடர் கழகம், தி.மு.க. போன்ற கட்சிகள் இந்துக்களுக்கு எதிரானவை. ரஜினிகாந்த் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர். இதனால், திராவிடர் கழகம், தி.மு.க. போன்ற கட்சிகள் தங்களுடைய ஓட்டுக்கும், கொள்கைக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்பதற்காக அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் பிள்ளையார் சிலையை உடைத்தவர்கள் மூட நம்பிக்கை என்ற பெயரில் குறிப்பிட்ட மதத்தை தாக்குகிறார்கள். ரஜினிகாந்த் செய்தது மிகப்பெரிய தொண்டாகும். அந்த தொண்டை முன்பு எம்.ஜி.ஆர். செய்தார். எம்.ஜி.ஆர். திராவிடர் கழக கொள்கையை பின்பற்றினாலும், மாதம்தோறும் கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வந்தார். ஜெயலலிதாவும், அதே வழியை பின்பற்றி வந்தார். அதன்விளைவாக தற்போது அ.தி.மு.க. அமைச்சர்களில், எம்.எல்.ஏ.க்களில் விபூதி, கும்குமம், சந்தனம் இல்லாதவர்களை பார்க்க முடியாது. இது தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி தளைத்தோங்குவதை காட்டுகிறது.

ரஜினிகாந்தை சில அரசியல் கட்சிகள் உள்நோக்கத்தோடு தாக்குகிறார்கள். பிரிவினையை ஊக்குவிக்குப்பவர்களின் செல்வாக்கு அடிபட்டு விடும். பெரியார் குறித்து ரஜினிகாந்தின் கருத்தை மக்கள் வரவேற்பார்கள். தான் சொன்ன கருத்தை அவர் மறுக்க கூடாது. அவர் இந்த பிரச்சினையில் மன்னிப்பு கேட்கவும் மாட்டார். ரஜினிகாந்த் ஆன்மிகம் தழுவிய அரசியலுக்கு வர வேண்டும். அடுத்த தேர்தலில் ரஜினிகாந்த் இயக்கம் போட்டியிட்டு பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதன்மூலம் தமிழ்நாட்டில் ஆன்மிகம் ஆட்சி வரவேண்டும். அது ரஜினிகாந்தால் மட்டுமே தர முடியும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாட்டில் உள்ள பாதுகாப்புக்கு மிகவும் அவசியம். இன்னொரு பிரிவினையை உருவாக்குவதற்காக தான் சில அரசியல் கட்சியினர் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இந்துக்கள் வாழ முடியவில்லை. அவர்கள் தங்களுடைய வாழ்வை காப்பாற்றி கொள்ள நமது நாட்டை தேடி வருகிறார்கள். மத்தியில் தாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான் சில எதிர்கட்சிகள் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள். இந்த சட்டத்தை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது குமரி மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை செயலாளர் இறச்சகுளம் மணி உடனிருந்தார்.

Next Story