வாக்காளர் தினத்தையொட்டி கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு


வாக்காளர் தினத்தையொட்டி கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 26 Jan 2020 3:48 AM IST (Updated: 26 Jan 2020 3:48 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் தினத்தையொட்டி கலெக்டர் தலைமையில் நேற்று வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருப்பூர்,

வலுவான மக்களாட்சிக்கு தேர்தல் கல்வியறிவு என்ற கருத்தை மையமாக வைத்து நேற்று 10-வது தேசிய வாக்காளா் தினம் கொண்டாடப்பட்டது. இதுதொடர்பாக தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதேபோல் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின விழாவில் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் பலர் வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த விழாவில் மூத்த வாக்காளர்களான குப்பாள் (வயது 86), வெங்கிடபதி (84) மற்றும் குப்பாத்தாள் (102) ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்து நினைவு கேடயத்தை கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்.

மேலும் விழாவில் தேர்தல் தொடர்பான பணிகளில் சிறப்பாக பணியாற்றிய கணினி இயக்குபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், தாராபுரம் சப்-கலெக்டா் பவன்குமார், மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனா் ரூபன்சங்கர்ராஜ், திருப்பூர் மாநகராட்சி அலுவலர் சிவகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாகுல்ஹமீது, தேர்தல் தனி தாசில்தாா் முருகதாஸ் மற்றும் அரசு அதிகாாிகள் கலந்து கொண்டனா்.

இதுபோல் திருப்பூர் ஆர்.டி.ஓ. கவிதா தேசிய வாக்காளர் தினத்தையொட்டி திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட செட்டிபாளையத்தில் காளியப்ப கவுண்டர்(95), சுப்பிரமணி (88) ஆகிய மூத்த வாக்காளர்களை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, நினைவு பரிசு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் தேர்தல் துணை தாசில்தார் ஜெகஜோதி உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story