திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி


திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி
x
தினத்தந்தி 25 Jan 2020 10:38 PM GMT (Updated: 25 Jan 2020 10:38 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் பேரணி நடத்தினர்.

திருப்பூர்,

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும், தேசிய குடிமக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும், இந்த சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களை நோக்கி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று பேரணி நடைபெற்றது.

அதன்படி திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையத்தில் இருந்து தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இதற்கு மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், பொருளாளர் அப்துல் ரகுமான், துணை தலைவர் யாசர் அராபத், துணை செயலாளர்கள், அப்துர் ரஷீத், ஷேக் பரீத், ரபீக், சித்திக், ஹனிபா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த பேரணியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்கள், பெண்கள் ஏராளமானவர்கள் கைகளில் தேசிய கொடி ஏந்தி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷங்களை முழங்கியபடி சென்றனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பதாகைகளை ஏந்திச்சென்றனர்.

மேலும், 100 அடி நீள தேசிய கொடி ஒன்றையும் அவர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மாநில தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் பலர் பேசினார்கள்.

இந்த பேரணியையொட்டி அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பேரணி சென்ற பகுதிகளில் போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலைக்கு வராமல் இருக்க சாலையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.


Next Story