கனடாவில் கத்திக்குத்து சம்பவம்: படுகாயம் அடைந்த குன்னூர் மாணவிக்கு தீவிர சிகிச்சை - சகோதரி விரைகிறார்


கனடாவில் கத்திக்குத்து சம்பவம்: படுகாயம் அடைந்த குன்னூர் மாணவிக்கு தீவிர சிகிச்சை - சகோதரி விரைகிறார்
x
தினத்தந்தி 25 Jan 2020 10:30 PM GMT (Updated: 25 Jan 2020 10:58 PM GMT)

கனடாவில் படிக்கும் குன்னூர் மாணவி கத்தியால் குத்தப்பட்டார். அவருக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அவரது சகோதரி விமானம் மூலம் கனடா விரைகிறார்.

கோவை,

நீலகிரி மாவட்டம் குன்னூர் புரூக்லேண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட். தொழில் அதிபர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ரெபேக்கா. இளைய மகள் ஆஞ்சலின் ரேச்சல் (வயது 23). இவர் கனடா நாட்டில் டோரண்டோ நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் சப்ளை செயின் மார்க்கெட்டிங் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். ஒரு ஆண்டு படிப்புக்காக கனடா சென்றுள்ள ஆஞ்சலின் ரேச்சல் அங்குள்ள பல்கலைக்கழகத்திற்கு வெளியே தனியாக அறை எடுத்து தங்கியிருந்து படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி காலை ஆஞ்சலின் ரேச்சல் வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவர் ஆஞ்சலின் ரேச்சலின் கழுத்து. மார்பு, வயிறு ஆகிய இடங்களில் கத்தியால் குத்தி விட்டு கைப்பையை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார். மேலும் அந்த ஆசாமி மாணவியை துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த ஆஞ்சலின் ரேச்சல் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனைகண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து குன்னூரில் உள்ள பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பார்க்க கனடா செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றனர். ஆனால் அவர்களுக்கு விசா கிடைக்காததால் அவர்களால் கனடா செல்ல முடியவில்லை.

இதுகுறித்து ஆஞ்சலின் ரேச்சல் தந்தை ஆல்பர்ட்டிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

எனது மகளை யாரோ கத்தியால் குத்தியதாகவும், துப்பாக்கியால் சுட்டதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்து சில மணி நேரம் கழித்து தான் மகள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். என்ன காரணத்துக்காக எனது மகள் தாக்கப்பட்டார்? யார் தாக்கினார் என்பது தெரியாது. தற்போது என் மகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

மேலும் எனது மகளின் செல்போன் லாக் ஆகி உள்ளது. அதை திறந்து பார்த்தால் தான் கடைசியாக அவரிடம் பேசியது யார் என்ற விவரம் தெரியும். அந்த விவரம் தெரிந்தால் தான் மகள் கத்தியால் குத்தப்பட்டதற்கான காரணம் தெரியவரும்.

எங்களுக்கு உடனடியாக விசா கிடைக்கவில்லை. அவசர அடிப்படையில் எங்களுக்கு விசா வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் எனது மூத்த மகள் டாக்டர் ரேபேக்காவுக்கு விசா கிடைத்துள்ளது.

அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சென்னையில் இருந்து கனடா செல்கிறார். அவர் அங்கு சென்ற பிறகு தான் எனது மகள் தாக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பது தெரியவரும். நானும் விரைவில் கனடா செல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மத்திய மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

கனடாவில் ஆஞ்சலின் ரேச்சல் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர்களது குடும்ப விசாவிற்கு உதவுமாறு நான் வெளியுறவுத்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளேன். எனவே அவரது குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக வெளியுறவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆஞ்சலின் ரேச்சலுடன் படிக்கும் மாணவர்கள் சிலர் கூறுகையில், கனடாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களை குறிவைத்து இப்படி தாக்குதல் நடத்தப்படுகிறது. எனவே ஆஞ்சலின் ரேச்சல் மீது நடத்தப்பட்டதும் இனவெறி தாக்குதலாகவும் இருக்கலாம் என்றனர்.

Next Story