தேர்தல் முன்விரோதம்: ஊராட்சி துணைத்தலைவருக்கு அரிவாள் வெட்டு


தேர்தல் முன்விரோதம்: ஊராட்சி துணைத்தலைவருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 25 Jan 2020 10:15 PM GMT (Updated: 25 Jan 2020 10:58 PM GMT)

கமுதி அருகே உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக ஊராட்சி துணைத்தலைவர் மற்றும் அவரது மகனை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கமுதி,

கமுதி அருகே உள்ள டி.புனவாசல் ஊராட்சியில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி தலைவராக தேவகி, துணை தலைவராக பஞ்சவர்ணம் (வயது67) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் தொடர்பாக தலைவர் மற்றும் துணை தலைவர் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் பஞ்சவர்ணம், இவரது மகன் முத்துச்சாமி(36) ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அதே ஊரைச்சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவரும், அ.தி.மு.க. பிரமுகருமான வெயிலான் என்பவரது மகன் கர்ணன்(45), கருப்புச்சாமி மகன் ஜெயபரதன்(43), பால்சாமி மகன் அய்யனார்(31), டி.வல்லக்குளம் கிராமத்தை சேர்ந்த கார்மேகம் மகன் அழகர்சாமி(54), இவரது தம்பி ரமேஷ்(44), பிச்சைராமு மகன் ராமகிருஷ்ணன்(40), மாயா மகன் மூர்த்தி(29), இவரது தம்பி சதீஷ்குமார்(27), ராமமூர்த்தி மகன் கந்தசாமி(32), திருவேட்டை மகன் பார்த்திபன்(45), லட்சுமணன் மகன் திருமலைக்குமார் உள்பட 50 பேர் திரண்டு வந்து வீட்டை முற்றுகையிட்டு கற்களை வீசி பொருட்களை சேதப்படுத்தினராம். மேலும் அரிவாள், கத்தி, இரும்பு கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களால் தந்தை, மகன் இருவரையும் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் கமுதி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பஞ்சவர்ணம் சிவகங்கை மருத்துவமனைக்கும், முத்துச்சாமி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பஞ்சவர்ணத்தின் மகன் முத்துச்சாமி அபிராமம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேந்திரன் உத்தரவின்படி அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story