உழைப்பவர்களுக்கு உரிய நேரத்தில் பதவி கொடுக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க. - சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
உழைப்பவர்களுக்கு உரிய நேரத்தில் தேடிச்சென்று பதவி கொடுக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க. என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
செஞ்சி,
செஞ்சி அருகே உள்ள மழவந்தாங்கல் ஊராட்சியில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் செஞ்சி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினருமான கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச வேட்டி-சேலைகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
உழைப்பவர்களுக்கு உரிய நேரத்தில் வீடு தேடிச்சென்று பதவி கொடுக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டுமே. அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட முதல்-அமைச்சராக வர முடியும். ஆனால் தி.மு.க.வில் கருணாநிதி குடும்பத்திற்கு வேலை செய்பவர்களே பதவிக்கு வரமுடியும்.
அ.தி.மு.க. அரசு, மக்கள் நலனுக்காக திட்டங்களை கொண்டு வருகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தி.மு.க. பொய் வழக்குகளால் நெருக்கடி கொடுத்து வந்த போதிலும் அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்று சிறப்பாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
கடந்த 8 ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசின் பல்வேறு திட்டங்களால் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் உயரவும், பெண்கள் வளர்ச்சிக்காகவும் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுவதற்கு, தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளதே சாட்சியாகும். இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குவதாக மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.இனி வரும் தேர்தல்களில் தி.மு.க.வின் நயவஞ்சகமான பொய்யான வாக்குறுதிகளை நம்பி அவர்களுக்கு வாக்களித்து விடாதீர்கள். மக்கள்நலத்திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வரும் ஜெயலலிதாவின் ஆசியுடன் நடைபெறும் அ.தி.மு.க.வையே ஆதரியுங்கள். இவ்வாறு அமைச்சர் சி.வி. சண்முகம் பேசினார்.
கூட்டத்துக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பூங்கோதை, கிளை செயலாளர்கள் ஆர்.தர்மலிங்கம், எம்.தர்மலிங்கம், கோபால், ஊராட்சி செயலாளர் பூங்காவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வல்லம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அண்ணாதுரை, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் ராமச்சந்திரன், பாசறை ஒன்றிய செயலாளர் சோழன், மாவட்ட மகளிர் அணி தலைவி மல்லிகா குமார், ஒன்றிய அவைத்தலைவர் அனந்தபுரம் நடராசன், ஒன்றிய நிர்வாகிகள் ராஜாராம், காமாட்சி, கணேசன், தேவகி ராஜாராம், அலமேலு பிச்சாண்டி, பொன்முடி, ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் தேவராஜ், நிர்வாகிகள் நாங்கலாம்பட்டு பிரபு, சின்னமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுலோச்சனா ஜெயபால், கூட்டுறவு சங்கத்தலைவர் பஞ்சமூர்த்தி, பொன்காசி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஜெகதீசன் வரவேற்றார். முடிவில் ஒன்றிய மாணவர் அணி தலைவர் சரவணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story