புதுக்கோட்டையில் குடியரசு தின விழா: தேசிய கொடியை கலெக்டர் உமா மகேஸ்வரி ஏற்றினார்


புதுக்கோட்டையில் குடியரசு தின விழா: தேசிய கொடியை கலெக்டர் உமா மகேஸ்வரி ஏற்றினார்
x
தினத்தந்தி 26 Jan 2020 10:30 PM GMT (Updated: 26 Jan 2020 2:33 PM GMT)

புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் தேசிய கொடியை கலெக்டர் உமா மகேஸ்வரி ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை, 

இந்தியா முழுவதும் நேற்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் உமா மகேஸ்வரி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் கலெக்டர் உமா மகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று போலீசார், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். அதன் பிறகு சமாதான புறா பறக்கவிடப்பட்டது. பின்னர் கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் வண்ண பலூன்களை பறக்க விட்டனர்.

பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில், தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசு தாரர்களுக்கு கதர் ஆடைகளை கலெக்டர் அணிவித்தார். தொடர்ந்து வருவாய்த்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தோட்டக்கலைத்துறை, தாட்கோ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை என பல்வேறு துறைகளின் சார்பில் 97 பயனாளிகளுக்கு ரூ.42 லட்சத்து 49 ஆயிரத்து 630 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

பின்னர் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கருவூலத்துறை, சுகாதாரத்துறை, தொழிலாளர் நலத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, நில அளவை பதிவேடுகள் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்துறை, பள்ளிக் கல்வித்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 487 அலுவலர் களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். மேலும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள் உள்பட 42 போலீஸ்காரர் களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி, ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி, குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளி, வெண்ணாவல்குடி அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட 6 பள்ளிகளை சேர்ந்த 834 மாணவ, மாணவிகள் பங்கேற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி, கில்லி போன்றவற்றை விளக்கும் வகையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. பின்னர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இறுதியில் நாட்டுப்பண் பாடப்பட்டு விழா நிறைவுபெற்றது.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ஜெயலட்சுமி, துணை தலைவர் உமா மகேஸ்வரி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப் பட்டனர்.

Next Story