73 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம், குடியரசு தின விழாவில் கலெக்டர் வழங்கினார்


73 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம், குடியரசு தின விழாவில் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 26 Jan 2020 10:00 PM GMT (Updated: 26 Jan 2020 5:09 PM GMT)

தேனி மாவட்டத்தில் பணியாற்றும் 73 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கத்தை குடியரசு தின விழாவில் கலெக்டர் பல்லவி பல்தேவ் வழங்கி பாராட்டினார்.

தேனி,

நாடு முழுவதும் குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டம் தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார்.

பின்னர் கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் திறந்த ஜீப்பில் நின்றபடி போலீசார், தீயணைப்பு துறையினர், ஊர்க்காவல் படையினர், நாட்டு நலப்பணித்திட்டம், சாரண, சாரணியர், தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகளின் அணிவகுப்பை பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார் உள்ளிட்டோரின் கம்பீர அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பு மரியாதையை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளை கலெக்டர் கவுரவித்தார். அமைதியை வலியுறுத்தி கலெக்டர் மற்றும் அதிகாரிகள் புறாக்களை பறக்க விட்டனர்.

விழாவில், போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றும் 73 போலீசாருக்கு முதல்- அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார். மேலும், 48 போலீசாருக்கு சிறந்த பணிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்துடன், அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 75 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

பின்னர், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 23 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.12 லட்சத்து 29 ஆயிரத்து 812 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இயற்கை வளங்கள் பாதுகாப்பு, தண்ணீர் சிக்கனம், தேசப்பற்று, ஒற்றுமை போன்றவற்றை மையப்படுத்தி கலை நிகழ்ச்சிகள் அமைந்து இருந்தன. அத்துடன் மாணவ, மாணவிகள் யோகா, ஜிம்னாஸ்டிக் மற்றும் பிரமிடு செய்து காட்டி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்.

கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார்.

Next Story