மாவட்ட செய்திகள்

ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் + "||" + VOC Erode Republic Day Celebration at the Park Playground

ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடந்த குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்.
ஈரோடு, 

இந்திய குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலையில் கொடி மேடை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன. காலை 7.30 மணிக்கு அதிகாரிகள் வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்துக்கு வந்தனர். காலை.7.45 மணிக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன் மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரை மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த கொடி மேடையை அவர் பார்வையிட்டார். காலை 7.55 மணிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் அரசு மரியாதையுடன் அவரது முகாம் அலுவலகத்தில் இருந்து வ.உ.சி. மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவர் வந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, ஆர்.டி.ஓ. முருகேசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். கிறிஸ்து ஜோதி பள்ளிக்கூட மாணவிகள் பேண்டு வாத்தியம் முழங்க கலெக்டர் சி.கதிரவன் மற்றும் அதிகாரிகளை ஊர்வலமாக, மரியாதையுடன் கொடி மேடைக்கு அழைத்துச்சென்றனர்.

கொடி மேடைக்கு வந்ததும் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கொடிக்கம்பத்தின் அருகே சென்றனர். குடியரசு தின பாரம்பரியப்படி, கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி கட்டப்பட்டு உச்சியில் கட்டப்பட்டு இருந்தது. கொடிக்கான கயிற்றை இழுத்து கலெக்டர் சி.கதிரவன் தேசியக்கொடியை பறக்க வைத்தார். கம்பத்தின் உச்சியில் கொடி ஏற்றப்பட்டதும், காவல்துறை இசைக்குழுவினர் தேசிய கீதம் இசைக்க, கலெக்டர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரும் பட்டொளி வீசிப்பறந்த மூவர்ண தேசியக்கொடிக்கு ‘சல்யூட்’ அடித்து மரியாதை செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் சி.கதிரவன் திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உடன் இருந்தார்.

நிகழ்ச்சியில் விடுதலையின் அடையாளமாக மூவர்ண பலூன்கள் (ஊதான்கள்) பறக்கவிடப்பட்டன. கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுடன், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதாவும் பலூன்களை வானில் பறக்கவிட்டார்.

அதைத்தொடர்ந்து ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் லயோலா இஞ்ஞாசி மேரி ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்புக்கு தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் டி.சுரேஷ்குமார், எச்.உஷாராணி, எஸ்.சுகுமார் ஆகியோர் வழிநடத்தினார்கள். தேசிய மாணவர் படை ஆண்கள் பிரிவினை சிக்கய்யநாயக்கர் கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார், ஊர்க்காவல் படையை தளபதி குமரேசன், மகளிர் பிரிவை வேளாளர் மகளிர் கல்லூரி மாணவி எஸ்.வினோதினி ஆகியோர் வழிநடத்தினார்கள். செஞ்சிலுவை சங்க இளையோர் பிரிவினை கலைமகள் பள்ளி மாணவி கவுசிகா வழிநடத்தி வந்தார். ஆயுதப்படை போலீசார், தேசிய மாணவர்படை, ஊர்க்காவல்படை மற்றும் செஞ்சிலுவை சங்க இளையோர் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் சி.கதிரவன் ஏற்றுக்கொண்டார். விழாவில் விடுதலைப்போராட்ட வீரர்களின் வாரிசுகள் மற்றும் தியாகிகளின் வாரிசுகளுக்கு கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் சால்வை அணிவித்தும் பரிசு வழங்கியும் பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்ந்து போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள், போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதுபோல் அனைத்து அரசுத்துறைகள், தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு கலெக்டர் சி.கதிரவன் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். 76 போலீசார் முதல்-அமைச்சர் பதக்கமும், 105 போலீசார் பாராட்டு சான்றிதழும் பெற்றுக்கொண்டனர்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மு.பாலகணேஷ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.பாலமுரளி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தினேஷ், நேர்முக உதவியாளர்கள் ஈஸ்வரன், முருகேசன், மாவட்ட வழங்கல் அதிகாரி கற்பகவல்லி, அக்னி எம்.சின்னசாமி (ஒளிரும் ஈரோடு), டாக்டர் கே.சுதாகர் (ஈரோடை), சக்தி மசாலா பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி, சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோமதி, ஈரோடு அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் பிரேம் ஞானக்கண் நவாஸ், உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் ராம்குமார், கலைமாமணி உள்பட பலரும் பாராட்டு சான்றிதழ்கள் பெற்றனர்.

விழாவில் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் படை பணியின்போது காயம் அடைந்து மாற்றுத்திறன் கொண்ட படைவீரர்கள் 6 பேருக்கு பராமரிப்பு மானியம் வழங்கப்பட்டது. மொடக்குறிச்சி தாலுகாவை சேர்ந்த 9 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 22 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, தையல் எந்திரம் ஆகியவை வழங்கப்பட்டன. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு துறை சார்பில் 11 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 132 பேருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 238 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. இதுபோல் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை மூலம் 9 பேருக்கு உதவிகள் செய்யப்பட்டன. மொத்தம் 416 பேருக்கு ரூ.2 கோடியே 18 லட்சத்து 36 ஆயிரத்து 679 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

குடியரசு தினவிழா சிறப்பு நிகழ்வாக பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஈரோடு இந்து கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சென்னிமலை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விஜயமங்கலம் ரூட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாஸ்திரிநகர் புனித ரீட்டா உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் தேசப்பற்று பாடல்களுக்கு நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்தனர்.

பி.பி.அக்ரகாரம் கிறிஸ்துஜோதி ெமட்ரிக்பள்ளி மாணவிகள் பேண்டு வாத்திய இசைக்கருவிகளுடன் சாகசம் செய்து காட்டினர். 25 மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்து பாராட்டு பெற்றனர். மொத்தம் 805 மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அவர்களுக்கு கலெக்டர் சி.கதிரவன் பாராட்டு தெரிவித்து, அனைத்து குழுவினருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி, மாவட்ட கல்வி அதிகாரிகள் மாதேசன், சிவக்குமார் ஆகியோரும் உடன் இருந்தனர். விழா தேசிய கீதத்துடன் நிைறவு பெற்றது.

விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவனுடன் அவருடைய தந்தை சின்னத்தம்பி, தாயார் சரஸ்வதி, மனைவி கே.தேன்மொழி, மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா ஸ்ரீ ஆகியோரும் கலந்து கொண்டு பார்வையாளர் அரங்கில் இருந்து நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ்ந்தனர். இதுபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசனின் மனைவி கீர்த்தனாவும் நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தார்.

தொழில் அதிபர்கள் எஸ்கேஎம்.மயிலானந்தன், வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ., மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பொன் கார்த்திக்குமார், சார்லஸ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜூ, ஏ.சேகர் (ஆயுதப்படை), கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அழகிரி, துணைப்பதிவாளர் கந்தராஜா, ஈரோடு நலப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள், அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் கவிதா, சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் ரபீக் அகமது, தாசில்தார்கள் மாசிலாமணி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ஈரோடு மாவட்ட செய்திமக்கள் தொடர்பு அதிகாரி சதீஸ்குமார் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு
ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபட்டனர்.
2. ஈரோட்டில் பரபரப்பு: செல்போனில் பேசிக்கொண்டு இருந்த வியாபாரியை கத்தியால் குத்திய வாலிபர்
ஈரோட்டில் செல்போனில் பேசிக்கொண்டு இருந்த வியாபாரியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபரை தீயணைப்பு படை வீரர்கள் துரத்தி சென்று பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
3. ஈரோட்டில் தூக்குப்போட்டு தொழில் அதிபர் தற்கொலை - பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் விபரீத முடிவு
பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் ஈரோட்டில் தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; வாலிபர் கைது
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5. ஈரோட்டில் கனி மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணி தீவிரம்
ஈரோட்டில் கனி மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.