கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீரில் மூழ்கிய 2 வாலிபர்களின் கதி என்ன?


கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீரில் மூழ்கிய 2 வாலிபர்களின் கதி என்ன?
x
தினத்தந்தி 26 Jan 2020 10:30 PM GMT (Updated: 26 Jan 2020 8:48 PM GMT)

கல்லட்டி நீர்வீழ்ச்சியில் 2 வாலிபர்கள் தண்ணீரில் மூழ்கினர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

மசினகுடி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி எல்க்ஹில் பகுதியை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி. இவரது மகன் சுந்தர்ராஜ்(வயது 24). இந்த நிலையில் கிரு‌‌ஷ்ணமூர்த்தி இறந்துவிட்டார். அவரது ஈமச்சடங்குக்காக சுந்தர்ராஜின் நண்பர்கள் திருப்பூரை சேர்ந்த ஆனந்த்(25), விஜயகுமார்(23) ஆகியோர் ஊட்டிக்கு நேற்று வந்தனர். ஈமச்சடங்கு முடிந்த பிறகு சுந்தர்ராஜ், ஆனந்த், விஜயகுமார், ஊட்டி விக்டோரியா ஹால் பகுதியை சேர்ந்த சாமுவேல்(23), எல்க்ஹில் பகுதியை சேர்ந்த கணேசன்(24), பரத்(26), பெர்ன்ஹில் பகுதியை கிப்சன்(23) ஆகிய 7 பேர் ஊட்டி அருகே உள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு சென்றனர்.அங்கு சாமுவேல், கணேசன் ஆகிய 2 பேரும் தண்ணீரில் இறங்கி விளையாடினர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்களின் நண்பர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், புதுமந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பின்னர் தண்ணீரில் மூழ்கிய 2 பேரின் உடல்களை தேடும் பணி நடந்தது. ஆனால் மதியம் 2 மணியில் இருந்து மாலை 6 மணி வரை தேடியும் தீயணைப்பு வீரர்களால் உடல்களை மீட்க முடியவில்லை.

இதையடுத்து இருள் சூழ தொடங்கி விட்டதாலும், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதாலும், கடுங்குளிர் நிலவியதாலும் உடல்களை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மேல் உடல்கள் தேடி மீட்கப்படும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மேலும் சம்பவம் குறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

கல்லட்டி நீர்வீழ்ச்சி எந்த துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தெரியவில்லை. இதனால் போதிய பராமரிப்பு இன்றி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அங்கு இருக்கும் ஆபத்தை அறியாமல் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் சென்று வருகின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தண்ணீரில் மூழ்கிய வாலிபர்களின் கதி என்ன? என்பது தெரியாததால் உறவினர்கள் தவிப்பில் உள்ளனர்.

Next Story