குடியுரிமை திருத்த சட்டம் மறுபரிசீலனை: மத்திய அரசுக்கு, தேவேகவுடா வலியுறுத்தல்


குடியுரிமை திருத்த சட்டம் மறுபரிசீலனை: மத்திய அரசுக்கு, தேவேகவுடா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Jan 2020 11:00 PM GMT (Updated: 26 Jan 2020 11:00 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தேவேகவுடா வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு,

ஜனதா தளம்(எஸ்) சார்பில் குடியரசு தின விழா பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான எங்களின் போராட்டம் ஓயாது. நாங்கள் மகாத்மா காந்தியின் வழியில் அமைதியாக போராட்டம் நடத்துகிறோம். இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று சில மாநிலங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் மத்திய அரசு, இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மத்திய அரசு சமீபகாலமாக எடுத்து வரும் சில முடிவுகள், நாட்டின் நலனுக்கு எதிராக உள்ளன. இந்து நாட்டை உருவாக்கும் பா.ஜனதாவின் முயற்சி வெற்றி பெறாது.

இதற்கு முன்பும் பா.ஜனதா தலைவர்கள் பலர் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். அது ஈடேறவில்லை. பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் இந்து நாட்டை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள் என்று தேவேகவுடா கூறினார்.


Next Story