ரூ.18,600 கோடி மதிப்பீட்டில் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு அனுமதி - கவர்னர் வஜூபாய் வாலா தகவல்


ரூ.18,600 கோடி மதிப்பீட்டில் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு அனுமதி - கவர்னர் வஜூபாய் வாலா தகவல்
x
தினத்தந்தி 26 Jan 2020 11:30 PM GMT (Updated: 26 Jan 2020 11:12 PM GMT)

ரூ.18,600 கோடி மதிப்பீட்டில் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குடியரசு தின விழா உரையில் கவர்னர் வஜூபாய் வாலா தெரிவித்தார்.

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா பெங்களூருவில் உள்ள பீல்டு மார்ஷல் மானேக்‌ஷா அணிவகுப்பு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது வானில் பறந்தபடி ஹெலிகாப்டரில் பூக்கள் தூவப்பட்டன.

அதன் பின்னர் கவர்னர் வஜூபாய்வாலா திறந்த வாகனத்தில் சென்று போலீசார், பள்ளி மாணவ-மாணவிகளின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் அவர் உரையாற்றிய போது கூறியதாவது:-

சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்க கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குற்றங்களை தடுப்பது மற்றும் அவை தொடர்பான விசாரணையை விரைவாக மேற்கொள்வது போன்ற விஷயங்களில் போலீஸ் துறை நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. நள்ளிரவில் சாலையில் ஒரு பெண் பயமின்றி சுதந்திரமாக நடமாடும் தினமே இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது போன்றது என்று மகாத்மா காந்தி கூறினார்.

பெண்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்ற சூழ்நிலையை உறுதி செய்யும் வகையில் நமது ஆண்கள் பெண்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை தெரிவிக்கும் வகையிலான கல்வியை குழந்தைகளுக்கு ேபாதிக்க வேண்டியது அவசியம். சிறப்பான ஆட்சி நிர்வாகம் செய்வதில் கர்நாடகம் தேசிய அளவில் 3-வது இடத்தில் உள்ளது. நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் கர்நாடகம் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்பது எனது விருப்பம்.

118 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கர்நாடகத்தில் பலத்த மழை பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டது. கிருஷ்ணா, பீமா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலை அதே ஆண்டில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களிலும் நீடித்தது. இந்த வெள்ளத்தால் பெரிய அளவில் சொத்துகள் சேதம் அடைந்தன.

விவசாய பயிர்கள் நாசம் அடைந்தன. அடிப்படை வசதிகளுக்கான கட்டமைப்புகளில் பாதிப்பு ஏற்பட்டது. மத்திய அரசின் உதவியுடன் கர்நாடக அரசு வெள்ளத்தில் சிக்கிய 7 லட்சம் பேரை பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். சொத்துகளை இழந்த 2.07 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.5 லட்சம், பாதி சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கடினமான நேரத்தில் சேதம் அடைந்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள கர்நாடகத்தை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் நிதி உதவியை வழங்கினர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

வனப்பரப்பு அதிகரிக்கப்பட்ட மாநிலங்களில் கர்நாடகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 2.82 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதன் மூலம் 41 ஆயிரத்து 325 எக்டேர் மரத்தோப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டம் மற்றும் பிரதமர் கிருஷி சிஞ்சாயி திட்டத்தை ஒருங்கிணைத்து 100 வறட்சி பாதித்த தாலுகாக்கள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் வறட்சியை தடுக்க நீர்நிலைகளை மேம்படுத்துதல் என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

விவசாயிகள் நமது நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள். விவசாயிகளை முன்னேற்ற கர்நாடக அரசு உறுதி பூண்டுள்ளது. பிரதமர் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6,000 மற்றும் கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.4 ஆயிரம் என மொத்தம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. விவசாய கடன் தள்ளுபடி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் ரூ.1 லட்சம் வரையிலும் தேசிய வங்கிகளில் ரூ.2 லட்சம் வரையிலும் தள்ளுபடி செய்ய இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கடன் தள்ளுபடி திட்டம் வருகிற மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த திட்டத்தால் 21 லட்சம் விவசாயிகள் பயன் பெறுகிறார்கள்.

கிருஷ்ணா மேல் அணை திட்டம் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. ரூ.5,500 கோடி செலவில் 12 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டம் உள்பட 20 திட்டங்களுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ரூ.59 ஆயிரத்து 574 கோடி தொழில் முதலீட்டு திட்டங்கள் கர்நாடகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம் தேசிய அளவில் 2-வது இடத்தில் உள்ளது. வட கர்நாடகத்தில் அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் பிப்ரவரி மாதம் தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகம் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி துறையில் 14 ஆயிரத்து 121 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் பெற்றுள்ளது. இது மாநிலத்தின் மொத்த மின்சார உற்பத்தியில் 49 சதவீதம் ஆகும். பாவகடாவில் அமைக்கப்பட்டுள்ள 2,050 மெகாவாட் திறன் கொண்ட அலட்ரா மெகா சூரியசக்தி மின்சார உற்பத்தி பூங்கா முழுமையான அளவில் மின் உற்பத்தி பணிகளை தொடங்கியுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாநில நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் சாலையை மேம்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 3,692 கிலோ மீட்டர் சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 156 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய சாலைகளை அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ரூ.18 ஆயிரத்து 621 கோடி மதிப்பீட்டில் 148 கிலோ மீட்டர் நீள பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பெங்களூருவில் 92 இடங்களில் இந்த வாகனங்களுக்கான ‘சார்ஜிங்’ மையங்கள் தொடங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மின் ஆளுமை திட்டம் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் மாநில அரசின் தலைமை செயலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநில அரசு சமீபத்தில் ‘இ-கெஜட்’ திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஒருங்கிணைக்கப்பட்ட மாநில மாணவர்கள் உதவித்தொகை செயலி மூலம் 25 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்-கர்நாடக மேம்பாட்டு வாரியம் தற்ேபாது கல்யாண-கர்நாடக மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த வாரியத்திற்கு ரூ.1,500 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ரூ.1,000 கோடி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கலபுரகியில் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ராய்ச்சூரில் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய-மாநில அரசுகள் இணைந்து சிக்கமகளூரு, யாதகிரி, ஹாவேரியில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிக்பள்ளாப்பூரில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய கல்லூரிகள் மூலம் கூடுதலாக 600 மருத்துவ இடங்கள் நமக்கு கிடைக்கும். ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக ரூ.30 ஆயிரத்து 445 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டிற்கு அபாரமான திறன் உள்ளது. நமது பாரம்பரியம், கலாசாரம் மற்றும் சம்பிரதாயங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். நாம் தேவையற்ற மூடநம்பிக்கைகள் பின்பற்றுவதை கைவிட வேண்டும். அறிவியல் பூர்வமான, ஒற்றுமை, அர்ப்பணிப்பு உணர்வுடன் நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்று வஜூபாய் வாலா பேசினார்.


Next Story