தஞ்சையில் நடந்த குடியரசு தினவிழாவில், ரூ.67¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் கோவிந்தராவ் வழங்கினார்


தஞ்சையில் நடந்த குடியரசு தினவிழாவில், ரூ.67¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் கோவிந்தராவ் வழங்கினார்
x
தினத்தந்தி 26 Jan 2020 10:15 PM GMT (Updated: 26 Jan 2020 11:58 PM GMT)

தஞ்சையில் நடந்த குடியரசு தினவிழாவில் 73 பயனாளிகளுக்கு ரூ.67¼ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கோவிந்தராவ் வழங்கினார்.

தஞ்சாவூர், 

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா நேற்று நடந்தது. விழாவில் தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலெக்டர் கோவிந்தராவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனுடன் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டதுடன், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து கலெக்டர் கோவிந்தராவ், சுதந்திரபோராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு நேரில் சென்று அவர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து அவர், அரசின் பல்வேறு துறை சார்பில் 73 பயனாளிகளுக்கு ரூ.67 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் கஜா புயலில் சிறப்பாக பணியாற்றிய ஒரத்தநாடு தாசில்தார் அலுவலக தெக்கூர் சரக வருவாய் ஆய்வாளர் ஜெயந்திக்கு சிறப்பாக பணியாற்றியதற்கான விருது வழங்கப்பட்டது. மேலும் அதிராம்பட்டினம் கடலோர காவல்படை நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஏட்டு வெற்றிச்செல்வன், தஞ்சை போலீஸ் கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் அரசு அலுவலர்கள் என 136 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், காவல் துறை அலுவலர்களுக்கு பதக்கங்களையும் கலெக்டர் வழங்கி கவுரவித்தார். விழாவில் பங்கேற்ற அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

விழாவில் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம், தஞ்சை போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கதிரேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்துமீனாட்சி, வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிரு‌‌ஷ்ணன், தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அனைத்துத் துறை முதன்மை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Next Story