தேனி கலெக்டர் அலுவலகத்தில் நெற்றி, உடலில் நாமமிட்டு அரைநிர்வாண கோலத்தில் மனு அளிக்க வந்த சீர்மரபினர் நலச்சங்கத்தினர்
தேனி கலெக்டர் அலுவலகத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் நெற்றி, உடலில் நாமமிட்டு அரை நிர்வாண கோலத்தில் மனு அளிக்க வந்ததனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மனு அளிக்க சீர்மரபினர் நலச்சங்க மாவட்ட செயலாளர் செல்வம், பெரியகுளம் ஒன்றிய தலைவர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டு தங்களின் சட்டையை கழற்றி அரைநிர்வாண கோலத்துக்கு மாறினர்.
பின்னர், அவர்கள் தங்களின் நெற்றியிலும், உடலிலும் நாமமிட்டு வந்தனர். மேலும் உடலில் டி.என்.டி. என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்க வந்துள்ளதாகவும், ஆர்ப்பாட்டம் செய்யபோவதில்லை என்றும் கூறினர். இருப்பினும், அரைநிர்வாண கோலத்தில் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று மனு அளிக்கக் கூடாது என்றும், சட்டை அணிந்து செல்லுமாறும் போலீசார் வலியுறுத்தினர். இதையடுத்து அவர்கள் சட்டை அணிந்து, கலெக்டர் பல்லவி பல்தேவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்தபடி இதரபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் உட்பிரிவு செய்து டி.என்.டி. (பழங்குடி சீர்மரபினர்) மக்களுக்கு 9 சதவீத இடஒதுக்கீடு வழங்க உறுதியளித்தது. அதை நிறைவேற்றும் வகையில், இதர பிற்படுத்தப்பட்டோர் உட்பிரிவு பட்டியலை 12 வாரத்தில் சமர்ப்பிக்க நீதிபதி ரோகிணி ஆணையம் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமைக்கப்பட்டது. ஆனால் எவ்வித காரணமும் இன்றி இந்த ஆணையத்துக்கு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது மேலும் 6 மாத காலம் நீட்டிப்பதாக மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. எனவே ரோகிணி ஆணையத்துக்கு மேலும் கால அவகாசத்தை நீட்டிக்காமல் உடனடியாக டி.என்.டி. மக்களுக்கு 9 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story