திருச்சி காந்திமார்க்கெட் அருகே பயங்கரம்: பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை


திருச்சி காந்திமார்க்கெட் அருகே பயங்கரம்:  பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 28 Jan 2020 5:30 AM IST (Updated: 28 Jan 2020 1:44 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே 4 பேர் கும்பல் சுற்றிவளைத்து பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டார், இதனால் அந்த பகுதியில் கடை அடைப்பு மற்றும் பதற்றம் நிலவியது.

திருச்சி,

திருச்சி வரகனேரி பென்சனர் தெருவை சேர்ந்தவர் விஜயரகு(வயது 39). பா.ஜ.க. பாலக்கரை மண்டல செயலாளராக இருந்தார்.

காந்திமார்க்கெட்டில் வாகன நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று அதிகாலை 6.30 மணி அளவில் விஜயரகு காந்திமார்க்கெட்டின் 6-வது நுழைவுகேட் அருகே வாகன நுழைவு கட்டண வசூலில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பென்சனர்தெருவை சேர்ந்த பாபு என்கிற மிட்டாய்பாபு (25), அவருடைய கூட்டாளிகள் 3 பேர் திடீரென விஜயரகுவை தலையின் பின்னால் அரிவாளால் வெட்டினர். அவர்களிடம் இருந்து அவர் தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் அவரை ஓடவிடாமல் 4 பேரும் சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவர் நிலைகுலைந்து ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவத்தை கண்ட அந்த பகுதியினர் உயிருக்கு போராடி கொண்டு இருந்த விஜயரகுவை ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் அவர் உயிரிழந்தார். இது பற்றி அறிந்த பா.ஜ.க. நிர்வாகிகள் அரசு மருத்துவமனையில் திரண்டனர். விஜயரகுவை கொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த படுகொலை சம்பவம் குறித்து காந்திமார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், விஜயரகுவின் மகளை அதே பகுதியை சேர்ந்த மிட்டாய்பாபு ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரது மகள் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்று காதலை ஏற்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார். இதை கேள்விப்பட்ட விஜயரகு மிட்டாய்பாபுவை கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் மிட்டாய்பாபு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து விஜயரகுவை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

இதற்கிடையே திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் விஜயரகுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. அரசு மருத்துவமனையில் திரண்டு இருந்த பா.ஜ.க. நிர்வாகிகள் சுப்பிரமணியன், இல.கண்ணன், பார்த்திபன், கவுதம், ராஜசேகர் மற்றும் பலர் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி அரசு மருத்துவமனை முன்பு மெயின்ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட்டு கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பா.ஜ.க.வினரை அப்புறப்படுத்த போலீசார் முயன்றனர். இதனால் பா.ஜ.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இந்தநிலையில் பா.ஜ.க. நிர்வாகி கொலை செய்யப்பட்டதை கண்டித்து கண்டன சுவரொட்டி அச்சடித்து ஒட்ட பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்து வந்தனர்.

ஆனால் போலீசார் அனைத்து அச்சகங்களுக்கும் போன் செய்து யாரும் இதுபோல் சுவரொட்டி அச்சடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும், இதனால் போலீசாரை கண்டித்தும் மறியல் செய்வதாக பா.ஜ.க.வினர் தெரிவித்தனர். பின்னர் ஸ்ரீரங்கம் உதவி கமி‌‌ஷனர் ராமச்சந்திரன் பா.ஜ.க.வினருடன் பேசி அவர்களை சமாதானம் செய்தார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அரசு மருத்துவமனைக்குள் சென்றனர். பின்னர் பகல் 2.30 மணி அளவில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிரு‌‌ஷ்ணன் காந்திமார்க்கெட்டில் விஜயரகு கொலை செய்யப்பட்ட இடத்துக்கு சென்று பார்த்தார்.

அவருடன் பா.ஜ.க.வினரும் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து காந்திமார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. கொலை நடந்த இடத்தை பார்த்துவிட்டு திரும்பியபோது, காந்திமார்க்கெட் அஞ்சுமன்பஜார் அருகே பா.ஜ.க.வினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. உடனே அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். போலீஸ் நிலையம் முன்பு திரண்டு நின்று கொலையாளிகளை கைது செய் என கோ‌‌ஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு அதிவிரைவுபடை போலீசாரும் குவிக்கப்பட்டனர். காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் மத்திய மண்டல ஐ.ஜி.அமல்ராஜ், போலீஸ் துணை கமி‌‌ஷனர் நி‌ஷா ஆகியோர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த படுகொலை சம்பவம் குறித்து விஜயரகுவின் தம்பி செந்தில்குமார் காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், ‘‘எனது அண்ணன் விஜயரகுவுடன் மிட்டாய்பாபு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த மாதம் 26-ந் தேதி காந்திமார்க்கெட்டில் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடந்தபோது, விஜயரகு குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக செயல்பட்டதால் எனது அண்ணனை சிலர் மிரட்டியதாக என்னிடம் கூறினார். ஆகவே எனது அண்ணனை திட்டமிட்டு கொலை செய்த மிட்டாய்பாபு மற்றும் சில நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறி இருந்தார். புகாரின்பேரில் காந்திமார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் இந்த கொலை தொடர்பாக 9 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சியில் பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி காந்திமார்க்கெட் அருகே பா.ஜ.க. நிர்வாகி 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனால் அந்த பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவியது.

Next Story