கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர் வீட்டை அபகரித்து மகன்கள் துரத்தியதாக புகார்


கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர் வீட்டை அபகரித்து மகன்கள் துரத்தியதாக புகார்
x
தினத்தந்தி 27 Jan 2020 10:00 PM GMT (Updated: 27 Jan 2020 8:49 PM GMT)

வீட்டை அபகரித்து மகன்கள் துரத்தி விட்டதாக கூறி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்று கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் வந்திருந்தனர். முன்னதாக அவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலிலேயே போலீசார் சோதனை செய்து அனுப்பி வந்தனர்.

இதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் வருவதற்கு முன்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் கூட்டத்தை தொடங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டிருந்தார். அப்போது முதியவர் ஒருவர் மனு கொடுப்பதற்காக பொதுமக்கள் கூட்ட அரங்கிற்குள் நுழைந்தார். பின்னர் அவர் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் தான் கையில் வைத்திருந்த பாட்டிலை எடுத்து, அதில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதை பார்த்ததும் அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் வெளியே அழைத்து சென்று, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரிடம் விசாரித்த போது, அவர் சிதம்பரம் அருகே கீழ்அனுவம்பட்டு சாலைக்கரையை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 75) என்று தெரிய வந்தது. அவர் தன்னுடைய மகன்கள் வீட்டை விட்டு அடித்து துரத்தி விட்டதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். முன்னதாக அவர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கு 4 மகன்கள் உள்ளனர். அதில் கடைசி மகன் மட்டும் என்னை கவனித்து வந்தார். மற்ற 3 பேரும் என்னை கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையில் கடைசி மகன் வெளிநாட்டுக்கு சென்றார். அவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தை என்னுடைய செலவுக்கு பயன்படுத்தியது போக ஒரு வீடும் கட்டினேன். அந்த வீட்டை அவரது பெயருக்கு எழுதி வைத்தேன். இதை அறிந்த 2 மகன்கள் கடைசி மகன் மற்றும் அவரது குடும்பத்தையும் அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார்கள். என்னையும் அடித்து துரத்தி வீட்டை அபகரித்து கொண்டனர். இதனால் நான் கிள்ளை ரெயில் நிலையத்தின் பின்புறம் வசித்து வருகிறேன்.

அங்கு வந்தும் என்னை அடித்து துன்புறுத்தி வருகிறார்கள். இது பற்றி கிள்ளை போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே எனது வீட்டை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்துக்கு வந்த கலெக்டர் அன்புசெல்வன், மாவட்ட வருவாய் அலுவலரிடம் நடந்த விவரத்தை கேட்டறிந்தார். இருப்பினும் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story