மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தம்


மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தம்
x
தினத்தந்தி 28 Jan 2020 10:00 PM GMT (Updated: 28 Jan 2020 6:39 PM GMT)

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டது.

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது வழக்கம். இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. பின்னர் ஜனவரி மாதம் 28-ந் தேதி தண்ணீர் திறப்பது நிறுத்தப் படுவது வழக்கம்.

அதாவது அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால் டெல்டா பாசனத்துக்கு குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அணையின் நீர்மட்டம் குறைவாக இருந்தது. இதனால் ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி மேட்டூர் அணையில் காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப் பட்டது.

அதன் பிறகு கடந்த ஆண்டு பருவமழை கைகொடுத்ததன் காரணமாக பாசனத்துக்கான தண்ணீர் தேவை குறைவாக இருந்தது. எனினும் தேவைக்கு ஏற்ப குறைத்தும், அதிகரித்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இதுமட்டுமின்றி கால்வாய் பாசனத்துக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்தது. இதனால் கடந்த ஆண்டு 4 தடவை தனது முழுகொள்ளளவான 120 அடியை எட்டி மேட்டூர் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்டு முதல் நேற்று வரை 150 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் டெல்டா பாசனத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று மாலை 6 மணிக்கு அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது அடியோடு நிறுத்தப்பட்டது. மேலும் கடந்த 15-ந் தேதி அன்று கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக நீர்மின் நிலையங்களில் நடைபெற்று வந்த நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், அணையையொட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக செல்லும். இதே போன்று காவிரி ஆற்றின் குறுக்கே செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிக்கோட்டை, பவானி உள்பட 7 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கதவணை நீர்மின் திட்டம் மூலமும் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த நீர் மின் நிலையங்களில் நடைபெற்று வந்த மின் உற்பத்தியும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 107.55 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 310 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

Next Story